ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி திருப்பதியில் ஸ்ரீரங்கம் கோயில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்: அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ரங்கம் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் சமர்ப்பித்தனர். திருமலை ஏழுமலையான் கோயிலில், ஆனிமாத கடைசி நாளான நேற்று ஆனிவார ஆஸ்தானம் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆனிவார ஆஸ்தானத்தின்போது தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்பிக்கப்படுகிறது. இதேபோல் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அதனை திருமலையில் உள்ள பெரிய ஜீயர் மண்டபத்தில் தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளாராவ் தலைமையில் பெரிய ஜீயர் முன்னிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் நேற்று காலை ஒப்படைத்தனர்.

பின்னர் அங்கு பட்டு வஸ்திரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், சிறப்பு கமிஷனர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் மாடவீதியில் பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக கொண்டு சென்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சேர்ப்பித்தனர். ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி கோயிலில் உள்ள மண்டபத்தில் சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தளினர். நேற்றிரவு உற்சவமூர்த்திகள் புஷ்ப பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தனர். ஏழுமலையான் கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

The post ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி திருப்பதியில் ஸ்ரீரங்கம் கோயில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்: அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: