பிரதமரின் 100 நாட்களின் சாதனை வளர்ச்சி அடைந்த நாட்டுக்கான அடித்தளம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சியின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில், பல்வேறு ஒன்றிய அமைச்சகங்கள் டெல்லியில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சி காலத்தில் முதல் 100 நாட்கள் கடந்துள்ளது. இது வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கான வலிமையான அடித்தளமாகும். மேலும் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்றது என்பது மூன்று மடங்கு உத்வேகத்தை கொடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்து துறைகளுக்கும் சேர்த்து ரூ.25லட்சம் கோடி இந்த நூறு நாட்களில் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள், பெண்கள்,மாணவ மாணவிகள், தொழிலாளர்கள் என்று அனைவரும் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டை பொருத்தமட்டில் வளர்ச்சிக்காக மோடி தலைமையில் ஆட்சி காலத்தில் ரூ.15 லட்சம் கோடி நிதி ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டுக்கு இரண்டு வந்தே பாரத் ரயில் இந்த நூறு நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே தமிழ்நாட்டில் ஏழு வந்தே பாரத் ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி கப்பல் துறைமுகத்தில் துறைமுகம் மேம்பாட்டுக்காக ஏழாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று தமிழ்நாட்டில் இந்த நூறு நாட்களில் நெடுஞ்சாலை பணிக்கு மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பிரதமரின் 100 நாட்களின் சாதனை வளர்ச்சி அடைந்த நாட்டுக்கான அடித்தளம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: