அதிமுக கூட்டணி முறிந்த நிலையில் தமிழகத்தில் பாஜ தனித்து போட்டி?..39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் தேர்வு தீவிரம்

சென்னை: அதிமுக கூட்டணி முறிந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதன் ஒருபகுதியாக 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் பாஜ முழு வீச்சில் இறங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுக, பாஜ இடையே மோதல் தீவிரமடைந்தது. அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு இடையே வார்த்தை போர் விஸ்வரூபம் எடுத்தது. அண்ணாமலை ஜெயலலிதாவை ஊழல்வாதி என்றும், அண்ணா குறித்தும் கருத்து தெரிவித்தார். எனவே இனியும் கூட்டணியை தொடருவதா என்று அதிமுக தலைவர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. தமிழகத்திலும் அதிமுக கூட்டணியில் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கூட்டணி முறிவு குறித்து டெல்லி மேலிடம்தான் முடிவு செய்யும் என்று அண்ணாமலை கூறி வருகிறார். அதே நேரத்தில் பாஜவை வெளியேற்றியது, நான் எடுத்த முடிவல்ல. அதிமுக தொண்டர்கள் முடிவு என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இந்த கருத்தை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார். இதனால், மீண்டும் அதிமுக கூட்டணியில் பாஜ இணைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

கூட்டணி முறிவை தொடர்ந்து டெல்லி சென்ற அண்ணாமலை அமித்ஷா, ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது அண்ணாமலையை டெல்லி தலைவர்கள் கடுமையாக எச்சரித்தனர். மேலும் 5 மாநில தேர்தல் முடியட்டும். அதன் பிறகு கூட்டணி குறித்து பேசிக்கொள்ளலாம். அதுவரை கூட்டணி தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். மேலும் தனி அணி அமைப்பது குறித்து அப்போது பேசிக்கொள்ளலாம் என்று கூறி அனுப்பி விட்டனர். அதே நேரத்தில் தனி அணி அமைக்கவும் டெல்லி மேலிடம் பச்சைக்கொடி காட்டி விட்டதாக கூறப்படுகிறது.

அதாவது, அதிமுக அணியில் இருந்து பிரிந்துள்ள ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் மற்றும் கடந்த முறை பாஜ கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள், சிறிய கட்சிகளை இணைத்து ஒரு தனி அணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த வியாழக்கிழமை பாஜ மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பாஜ தனித்து போட்டியிடுவது புதிதல்ல. அதிமுக பிரிந்து போனதற்கு வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் திமுக-பாஜவுக்கு இடையில் தான் போட்டி. அதிமுகவுடன் பாஜ எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் அண்ணாமலை அதிரடியாக அறிவித்தார். இதனால் அண்ணாமலை தனி அணி அமைப்பதில் உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.

எனவே, பாஜ தலைமையில் தனி அணி உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் 39 தொகுதிகளிலும் பொறுப்பாளர்களை நியமிக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளார். இதற்காக 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பாஜ சார்பில் விரைவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பாக பாஜ பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 39 தொகுதிகளிலும் அடுத்த 10 நாட்களுக்குள் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான பட்டியல் தேர்வு செய்யப்பட்ட பிறகு, தேசிய தலைமைக்கு நேரடியாக அனுப்பவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். எந்த குற்றப் பின்னணியும் இல்லாதவர்களை பொறுப்பாளர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பொறுப்பாளர்களை மாநில அளவிலான நிர்வாகிகள் தேர்வு செய்வார்கள் என தெரிகிறது. அந்த பொறுப்பாளர்கள் மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் பாஜ தலைமையில் புதிய அணி போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, பாஜ என மும்முனை போட்டி நிலவும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் பாஜ தலைமையில் புதிய அணி உருவாகி போட்டியிடும் பட்சத்தில் யார், யார் போட்டியிட வாய்ப்புள்ளது என்ற பட்டியல் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

* அதிமுக அணியில் இருந்து பிரிந்துள்ள ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் மற்றும் கடந்த முறை பாஜ கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள், சிறிய கட்சிகளை இணைத்து ஒரு தனி அணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

The post அதிமுக கூட்டணி முறிந்த நிலையில் தமிழகத்தில் பாஜ தனித்து போட்டி?..39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் தேர்வு தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: