கும்பாபிஷேக விழா முடிந்த பிறகு அயோத்தி ராமர் கோயிலுக்கு குடும்பத்துடன் செல்வேன்: கெஜ்ரிவால் பேட்டி

புதுடெல்லி: ‘வரும் 22ம் தேதி கும்பாபிஷேக விழா முடிந்த பிறகு, அயோத்தி ராமர் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடுவேன்’ என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். உபி மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி நடக்க உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ள பல்வேறு கட்சி தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத நிலையில் மக்களவை தேர்தலை குறிவைத்து அரசியல் ஆதாயத்திற்காக ஆளும் பாஜ அரசு கும்பாபிஷேக விழாவை நடத்துவதால் அதை பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் புறக்கணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வது குறித்து டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பாதுகாப்பு காரணங்களுக்காக ஒருவர் மட்டுமே விழாவுக்கு அனுமதிக்கப்படுவதாக கடிதம் எனக்கு கிடைத்துள்ளது. தனிப்பட்ட முறையில் அழைப்பிதழ் தந்து வரவேற்க ஒரு குழுவினர் வருவார்கள் என்றனர். அப்படி யாரும் வரவில்லை. நான் எனது மனைவி, குழந்தைகளுடன் ‘குழந்தை ராமரை’ தரிசிக்க விரும்புகிறேன். எனது பெற்றோரும் ராம் லல்லாவை தரிசனம் செய்ய ஆவலுடன் உள்ளனர். எனவே, வரும் 22ம் தேதி நடைபெறும் விழாவுக்குப் பிறகு குடும்பத்துடன் ராமர் கோயிலுக்கு சென்று வழிபடுவேன்’’ என்றார்.

* 22க்குப் பிறகு போனா ஈஸியா தரிசிக்கலாம்

ராமர் கோயில் விழாவிற்கான அழைப்பிதழ் அனுப்பிய ராம ஜென்ம பூமி தீர்த்த சேஷத்ரா அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய்க்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் எழுதிய கடிதத்தில், ‘ராமர் சிலை பிரதிஷ்டை விழாவுக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பதன் மூலம் நான் மகிழ்ச்சி அடைவேன். ஜனவரி 22க்குப் பிறகு ராமரை தரிசனம் செய்வது எளிதாக இருக்கும் என்பதால் அப்போது அயோத்திக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன். மேலும், அதற்குள் கோயிலும் முழுமையாக கட்டப்பட்டு விடும்’’ என கூறி உள்ளார்.

The post கும்பாபிஷேக விழா முடிந்த பிறகு அயோத்தி ராமர் கோயிலுக்கு குடும்பத்துடன் செல்வேன்: கெஜ்ரிவால் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: