ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா: அறநிலையத்துறை அறிவிப்பு

சென்னை: ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்து, அதற்கான முன்பதிவு செய்ய பக்தர்களுக்கு அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. ‘தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கும், வைணவ கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத் துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்” என 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு ஆடி மாதம் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, இந்தாண்டு ஆடி மாதமும் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து அம்மன் கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பாரிமுனை காளிகாம்பாள் கோயில், ராயபுரம் அங்காளபரமேஸ்வரி கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் உள்ளிட்ட 9 கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயில், மயிலாப்பூர் முண்டககண்ணியம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களுக்கு இரண்டாவதாக ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் வெக்காளியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் உள்ளிட்ட 8 கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர் மகா மாரியம்மன் கோயில், திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில், தஞ்சை பெரியநாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோயில் உள்ளிட 6 கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த ஆன்மிகச் சுற்றுலா பக்தர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு கோயில் பிரசாதம், கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும். பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பதிவு செய்திட வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.ttdconline.com என்ற சுற்றுலாத்துறை இணையதளத்திலும், 044-25333333, 25333444 என்ற தொலைபேசி எண்களிலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4253 1111 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.

The post ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா: அறநிலையத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: