சனிபெயர்ச்சி விழாவையொட்டி திருக்கொடியலூர் சனிபகவான் கோயிலில் முன்னேற்பாடு தீவிரம்

திருவாரூர், டிச.4 : திருவாரூர் மாவட்டம் நன்னிலம் திருக்கொடியலூர் சனி பகவான் கோயிலில் வரும் 27ம் தேதி சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பேரளம் அடுத்த திருக்கொடியலுரில் புகழ்பெற்ற அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோயிலில் தான் சூரிய பகவானுக்கும், சாயாதேவிக்கும்  சனீஸ்வரபகவான் அவதரித்ததாக புராண வரலாறுகள் தெரிவிக்கின்றன. இங்கு அவதரித்த சனீஸ்வர பகவான் மங்கள சனீஸ்வர பகவான் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். சனீஸ்வரதோஷத்திலிருந்து விடுபட இந்திரனும் இக்கோயிலில் வழிபட்டதாக ஐதீகம். மேலும் சனிப்பெயர்ச்சி நாளில் இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி வரும் 27ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு  சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனையொட்டி நடைபெறும் சனிப் பெயர்ச்சி விழாவில் இக்கோயிலின் அனுகிரஹமூர்த்தியான  மங்கள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு சனி பரிகார ஹோமமும், அபிஷேகமும் நடைபெறுகிறது. இதனையொட்டி பரிகார ராசிகளான மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் இந்த சனிப் பெயர்ச்சியின்போது பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் என குறிப்புகள் தெரிவிக்கின்றன. வழக்கமாக இந்த விழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு சென்று வழிப்படும் நிலையில் நடப்பாண்டு தற்போது கொரோனாவை கருத்தில் கொண்டு அரசு உத்தரவின்படி குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களே அனுமதிக்கப்படும் நிலை இருந்து வருகிறது.

எனவே இதனை கருத்தில் கொண்டு சிறப்பு பாலாபிஷேகத்திற்கான நன்கொடையாக ரூ.100ம், சனி பரிகார ஹோமத்திற்கு ரூ.500ம் நன்கொடை செலுத்தினால், பூஜை செய்து விபூதி, குங்குமம் பிரசாதம் பக்தர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகையினை பணவிடை அல்லது வரைவோலையாகவோ அல்லது கொல்லுமாங்குடியில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை எண் 7493000100030661 என்ற வங்கி கணக்கிலும் செலுத்தலாம் எனவும், நேரில் வரும் பக்தர்கள் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்வதற்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் தன்ராஜ், தக்கார் மாதவன் மற்றும் மேலாளர் வள்ளிக்கந்தன் ஆகியோர் செய்த வருகின்றனர்.

Related Stories: