தமிழகம் முழுவதும் அமைய உள்ள மினி கிளினிக்குகளில் பார்மசிஸ்ட்களை நியமிக்க வேண்டும் மருந்தாளுனர்கள் வலியுறுத்தல்

வேலூர், டிச.3:தமிழகம் முழுவதும் மக்களை நோக்கி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் தொடங்கப்பட உள்ள மினி கிளினிக்குகளில் பார்மசிஸ்ட்டுகளையும் நியமிக்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும் உள்ள பட்டதாரி மற்றும் பட்டய மருந்தாளுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மக்களை நோக்கி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக 2 ஆயிரம் இடங்களில் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதற்காக 2 ஆயிரம் டாக்டர்கள், 2 ஆயிரம் செவிலியர், 2 ஆயிரம் அடிப்படை பணியாளர் பணியிடங்களையும் உருவாக்கியுள்ளது. பார்மசிஸ்ட்டுகள், செவிலிய உதவியாளர் போன்ற அத்தியாவசிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.

மினி கிளினிக்குகளில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை வழங்குவதற்கு 1948 மருந்தியல் சட்டப்படி பார்மசிஸ்ட்டுகள் கட்டாயம் தேவை. இதன் அடிப்படையில் தற்போது பட்டம் மற்றும் பட்டய படிப்பை முடித்துவிட்டு வேலையின்றி இருக்கும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தாளுனர்கள் உள்ளனர். இவர்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுதொடர்பாக அரசு மருத்துவமனை மருந்தாளுனர்கள் தரப்பில் கேட்டபோது, ‘ஏற்கனவே அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நிறைய காலி பணியிடங்கள் உள்ளன. இந்த நிலையில் மினிகிளினிக்குகளில் மருந்தாளுனர் பணியிடம் உருவாக்கப்படாதது வேதனையளிக்கிறது. மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்ட, பட்டய படிப்பு முடித்த மருந்தாளுனர்கள் வேலையின்றி உள்ளனர். இவர்களை காலி பணியிடங்களிலும், மினி கிளினிக்குகளிலும் நியமிக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>