மதகு அடைக்கப்பட்டு குடகனாற்றுக்கு தண்ணீர் திறப்பு

சின்னாளபட்டி, நவ.25:திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து கூலையாறு வழியாக வரும் மழை தண்ணீர் சித்தயன்கோட்டை, நரசிங்கபுரம் ராஜவாய்க்கால், ஆத்தூர் ராஜவாய்க்கால் வழியாக ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கத்திற்கு செல்வது வழக்கம். தற்போது மழை பெய்து வருவதாலும், குடகனாற்றில் முறையான தண்ணீர் வரத்து இல்லாததாலும் தண்ணீர் வேண்டும் என குடகனாற்று பாசன விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதனை அடுத்து கலெக்டர் விஜயலெட்சுமி, நரசிங்கபுரம் ராஜவாய்க்காலில் 3 மதகுகள் வழியாக செல்லும் தண்ணீரில் ஒரு மதகை அடைத்து காமராஜர் நீர்தேக்கத்திற்கும், குடகனாற்றுக்கும் திறந்துவிட உத்தரவிட்டார். இதனை அடுத்து கோட்டாட்சியர் உஷா தலைமையில் நிலக்கோட்டை வடிநிலகோட்ட உதவி பொறியாளர் நீதிபதி, நங்காஞ்சியர் வடிநில கோட்டம் உதவிபொறியாளர் சௌந்தரம், இளநிலை பொறியாளர் தங்கவேல் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பெரிய கன்னிமார் கோவில் அருகே கூலையாற்றிலிருந்து வரும் மழை தண்ணீர் பிரியும் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

பின்னர் சித்தயன்கோட்டை - நரசிங்கபுரம் ராஜவாய்க்காலில் செல்லும் தண்ணீரில் ஒரு மதகை அடைக்க உத்தரவிட்டனர். அதன்படி  பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒரு மதகை அடைத்தனர். மதகை அடைத்த பின்பு குடகனாற்றுக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மதகு பகுதி மற்றும் குதிரைகுளிப்பாட்டி, ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கம் நுழைவு வாயில் உட்பட அணைக்கட்டுக்கு வரும் அனைத்து பகுதிகளிலும் செம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அணைக்கட்டுக்கு வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

Related Stories: