மத்திய அரசை கண்டித்து 26ம் தேதி வேலைநிறுத்தம் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பங்கேற்பு

பழநி, நவ.25: மறு சீரமைப்பு என்ற பெயரில் தனியார்மயமாக்கக் கூடாது என வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்களும் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசின் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும். நிதித்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதை கைவிட வேண்டும். அரசுத்துறை, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் பதவி ஓய்வு பெறும் முன்பே கட்டாய பணி ஓய்வு வழங்கும் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும். அனைத்து அரசு ஊழியருக்கும் பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். குடிநீர் வடிகால் வாரிய தொகுப்பூதிய ஊழியர்கள் உச்சநீதிமன்றத்தில் பெற்ற தீர்ப்பின்படி ஊதிய நிர்ணயம், ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். குடிநீர் வாரியத்தில் மறு சீரமைப்பு என்ற பெயரில் பணியிடங்களை சுருக்கி தனியார்மயத்திற்கு செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐஎன்டியுசி, ஏஐசிடியூ, ஏஐசிசிடியூ, எல்பிஎப், ஹெச்எம்எஸ் டியூசிசி, யுடியுசி போன்ற சங்கங்கள் வரும் 26ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் சிஐடியு சங்கமும் பங்கேற்குமென தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: