வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தல்

திருவாரூர், நவ. 23: திருவாரூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வாக்காளர் பட்டி யல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021 குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் பார்வையாளர், அருங்காட்சியக ஆணையர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர் முன்னிலை வகித்தார். பின்னர் கூட்டம் குறித்து மாவட்ட தேர்தல் பார்வையாளரும், அருங்காட்சியக ஆணையருமான சண்முகம் தெரிவித்ததாவது:

ஜனவரி 1ம் தேதி 2021ஐ தகுதி நாளாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16ம் தேதி வெளியிடப் பட்டுள்ளது. 18 வயது நிறைவடைந்து இதுநாள் வரை வாக்காளர்பட்டியலில் இடம் பெறாதவர்களும், 01.01.2021 அன்று 18 வயது நிறைவடைய உள்ளவர்களும் அதாவது 1.1.2003 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், இறந்த அல்லது இடம் பெயர்ந்த வாக்காளரது பெயரினை நீக்கம் செய்வதற்கும், பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்வதற்கும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் 16.11.2020 முதல் 15.12.2020 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையிலும், பொது மக்கள் கூடும் முக்கிய இடங்களில் விளம்பர பதாகைகள் அமைத்தும் விளம்பரப் படுத்த வேண்டும். உயர்அதிகாரிகள், அலுவலர்கள் முகாம்கள் நடைபெறும் பகுதிகளுக்கு தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு தொடர்புடைய படிவங்கள் கையிருப்பில் உள்ளதா என்பது போன்ற பணிகளையும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், டிஆர்ஓ பொன்னம்மாள், மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் லேகா, ஆர்டிஓக்கள் திருவாரூர் பாலசந்திரன், மன்னார்குடி புண்ணியகோட்டி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: