புதுவையில் அதிகாலை பயங்கரம் பெட்ரோல் பங்க் ஊழியரை பைக்கில் கடத்தி படுகொலை 4 பேர் கும்பல் சிக்கியது- பகீர் தகவல்

புதுச்சேரி, நவ. 20: புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை பைக்கில் கடத்தி தலையில் கல்லைபோட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கும்பலை பிடித்த தனிப்படை கொலைக்கான காரணம் குறித்து நடத்திய விசாரணையில் பகீர் தகவல் கிடைத்துள்ளது.  புதுச்சேரி, அய்யங்குட்டிபாளையம், சிவசக்தி நகர், அமைதி நகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மகன் ஜெயபிரகாஷ் (27). திருமணமாகாத இவர் குருமாம்பேட், வழுதாவூர் ரோட்டில் ஒரு மாதத்துக்கு முன்பு புதிதாக திறக்கப்பட்ட பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அந்த பங்கில் ஜெயபிரகாஷ் பணியில் இருந்தார்.

 நேற்று அதிகாலை 2 பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், திடீரென ஜெயபிரகாஷை சுற்றிவளைத்து அங்கிருந்த சவுக்கு கழியால் தாக்கியது. இதை பங்க் மேலாளரான டி.என்.பாளையம், புதுநகரைச் சேர்ந்த திவேக் (27) மற்றும் சக பணியாளர்கள் தடுக்க வந்த நிலையில் அவர்களை துணிகரமாக மிரட்டிய அக்கும்பல், ஜெயபிரகாஷை தங்களது பைக்கில் வலுக்கட்டாயமாக ஏற்றி அவரை கடத்தியது.

 இதனால் அதிர்ச்சியடைந்த பங்க் ஊழியர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்துக்கு உடனே தகவல் கொடுத்தர். வடக்கு எஸ்பி சுபம்கோஷ், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் (பொறுப்பு), எஸ்ஐ பிரியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

 பின்னர் பங்க் மேலாளரிடம் புகாரை பெற்று 364 பிரிவின்கீழ் (கொலை செய்யும் நோக்கில் கடத்துதல்) வழக்குப்பதிந்த போலீசார் அருகிலுள்ள வில்லியனூர் மற்றும் கோரிமேடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே கடத்தப்பட்ட ஜெயபிரகாஷை மீட்க விடியவிடிய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  இதனிடையே ஊசுட்டேரியை ஒட்டிய பொறையூர் ரோட்டில் காலி மனையில் சேற்றில் முக்கியும், தலையில் கல்லை போட்டும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், தலைநசுங்கி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த ஜெயபிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கதிர்காமத்துக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் 2 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கொலை செய்யப்பட்ட ஜெயபிரகாஷீக்கும், சண்முகாபுரத்தைச் சேர்ந்த சபரிநாதன் (25) என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள சாராயக்கடையில் குடித்தபோது பிரச்னை ஏற்பட்டு மோதலில் முடிந்ததும், அதன்பிறகு இருவரும் அவ்வப்போது செல்போனில் பேசி மிரட்டல் விடுத்து வந்ததும் தெரியவந்தது. எனவே இதன் எதிரொலியாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகித்த போலீசார், ஜெயபிரகாஷ் கடத்தப்பட்ட பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமிராக்களை பார்வையிட்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். பின்னர் 4 பேர் மீது கொலை வழக்குப்பதிந்த போலீசார் அவர்களை வலைவீசி தேடினர்.

 இதனிடையே இவ்வழக்கு தொடர்பாக சண்முகாபுரம் சபரிநாதன் (25), டெம்போ ராஜா (24) மற்றும் டெம்போ ராஜாவின் உறவினரான மார்த்தான் (23), முத்தியால்பேட்டை எலி கார்த்திக் (26) உள்ளிட்டோரை தனிப்படை நேற்று மதியம் சுற்றி வளைத்த நிலையில் அவர்களை கொரோனா பரிசோதனைக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ஜெயபிரகாஷின் உடல், நேற்று கதிர்காமத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அசம்பாவிதம் தடுக்க அய்யங்குட்டிபாளையம், குருமாம்பேட் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பெட்ரோல் பங்க் ஊழியர் பைக்கில் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இரு தினங்களுக்கு முன்பு கட்ட அஜித் என்பவரை எதிர்தரப்பு கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: