கோவில்பட்டி அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 40 பவுன், ரூ.2 லட்சம் கொள்ளை

கோவில்பட்டி, நவ. 11:   கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (65). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி அய்யம்மாள். தம்பதிக்கு பாண்டிதுரை (30) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருமணமான மகள் வெளியூரில் வசித்து வருகிறார். இவரது இரு பெண் குழந்தைகள் தற்போது தாத்தா வேலு வீட்டில் அவரது பராமரிப்பில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வேலு தனது மனைவி, மகன் மற்றும் பேத்திகளுடன் வீட்டின் முன்அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் இவரது வீட்டின் காம்பவுன்ட் சுவர் ஏறிக்குதித்த மர்மநபர்கள், மாடிப்படி வழியாக வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் அங்குள்ள ஒரு அறையில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த நெக்லஸ், வளையல், செயின், மோதிரம், கம்மல் உள்ளிட்ட 40 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

பின்னர் நேற்று காலை இதுகுறித்து தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த வேலு நாலாட்டின்புத்தூர் போலீசுக்கு புகார் அளித்தார். இதையடுத்து கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன், இன்ஸ்பெக்டர் சுகாதேவி, எஸ்ஐக்கள் முத்துவிஜயன், நாராயணன், விநாயகம், ஏட்டு முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தூத்துக்குடியில் இருந்து  வந்த  விரல் ரேகை பிரிவு எஸ்ஐக்கள் சத்தியசீலன், அருணாசலம் ஆகியோர் கொள்ளையர்களின் ரேகைகளை பதிவுசெய்தனர்.  இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள போலீசார், வேலு வீட்டை பற்றி நன்கு அறிந்தவர்கள்தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Related Stories: