கொரோனா சிறப்பு ஊதியம் வழங்க கோரி திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், நவ.10: திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா சிறப்பு ஊதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அறிவித்த கொரோனா சிறப்பு ஊதியம் வழங்கிட வேண்டும், கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும், தீபாவளி போனசாக 20 சதவிகிதம் வழங்கிட வேண்டும் ஊதிய உயர்வு, வாரவிடுமுறை, மற்றும் இதர படிகள் ஆகியவற்றினை வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளை செயலாளர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, துணைத் தலைவர் பழனிவேல் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: