சலுகை விலையில் விற்கப்பட்ட 5 டன் வெங்காயம் அரை மணி நேரத்தில் காலி

ஈரோடு,நவ.1: கூட்டுறவு துறை மூலம் சலுகை விலையில் விற்கப்பட்ட 5 டன் வெங்காயம் அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்ததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். தமிழகத்தில்  வெங்காயம் பதுக்கல் மற்றும் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக  வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.90 முதல்  ரூ.110 வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு  வருகின்றனர். இதையடுத்து கூட்டுறவு துறை மூலம் எகிப்து உள்ளிட்ட சில  நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தும், கர்நாடகா, ஆந்திரா மற்றும்  வடமாநிலங்களில் இருந்தும் பெரிய வெங்காயத்தை கொள்முதல் செய்து கிலோ ரூ.45  என்ற விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்துக்கு கடந்த 28ம் தேதி 5 டன் வெங்காயம்  ஒதுக்கப்பட்டது.

 ஈரோட்டில் சலுகை விலையில் வெங்காய விற்பனை செய்யும்  திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதையடுத்து ஒவ்வொரு தாலுகாவுக்கும் 500 கிலோ  வீதம் அனுப்பப்பட்டது. வேளாண் கூட்டுறவு விற்பனை நிலையம் மற்றும் ரேஷன் கடை உள்ளிட்ட பகுதிகளில் சலுகை வெங்காயம் விற்பனை தொடங்கி வைக்கப்பட்ட  அரை மணி நேரத்திலேயே 500 கிலோ வீதம் அனைத்து தாலுக்காவிலும் சேர்த்து 5 டன் வெங்காயம் விற்றுத் தீர்ந்துவிடுவதால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  தற்போது நிலவி  வரும் தட்டுப்பாடு மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஒவ்வொரு  தாலுகாவுக்கும் குறைந்தபட்சம் 5 டன் வெங்காயம் ஒதுக்கினால் மட்டுமே  நிலைமையை சமாளிக்க முடியும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>