மனைவியை மண் வெட்டியால் தாக்கிய தொழிலாளி கைது

அந்தியூர், அக்.30: அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பி பாளையத்தை சேர்ந்தவர் ராஜூ (53). இவரது மனைவி மீனாட்சி (43). இருவரும் அங்குள்ள செங்கல் சூளையில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராஜூ, தனக்கு கிடைக்கும் கூலி பணத்தை மது குடிப்பதற்காக செலவு செய்து வந்தார்.

நேற்று மதியம் மீனாட்சி செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்தபோது ராஜூ குடிபோதையில் வந்துள்ளார். இதை மீனாட்சி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அருகில் கிடந்த மண் வெட்டியை எடுத்து மீனாட்சியின் தலையில் பலமாக அடித்தார்.

இதில் பலத்த காயம் ஏற்பட்ட மீனாட்சியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மீனாட்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர்.

Related Stories:

>