பெண்ணாடம் பகுதியில் கோவில் உண்டியல் உடைப்பு சம்பவங்களில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது

விருத்தாசலம், அக். 30: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடத்தில், 10க்கும் மேற்பட்ட கோயில்களின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, பெண்ணாடம் சோழ நகரை சேர்ந்த நாகராஜன் மகன் அகிலன்(18), ராஜேந்திரன் மகன் கதிர்(19), சீனிவாசன் மகன் கார்த்திகேயன்(25), கணேசன் மகன் கார்த்திக்(18), சக்திவேல் மகன் சதீஷ்குமார்(19) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்களுக்கு மூளையாக செயல்பட்டு வந்த அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் சுக்கு என்கிற சூரியமூர்த்தி (25) என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் ஆட்கள் இல்லாத சமயம் பார்த்து வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவம் நடைபெற்று வந்தது. இதையடுத்துகடலூர் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில், விருத்தாசலம் டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் விருத்தாசலம் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார் அடங்கிய சிறப்பு தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று பெண்ணாடம் பழைய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சூரியமூர்த்தியை போலீசார் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அவர் மீது ஏற்கனவே பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து சூரியமூர்த்திக்கு ஆதரவாக இச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்த அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் சிந்தனைசெல்வன், வேல் மகன் பாடி என்கிற விஜய் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: