மழை, பனி காலமான அக்டோபர் முதல் ஜனவரி வரை 22 சதவீதம் ஈரப்பத நெல் கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்

தஞ்சை, அக். 22: மழை மற்றும் பனி காலமான அக்டோபர் முதல் ஜனவரி வரை 4 மாதங்களுக்கு 22 சதவீதம் ஈரப்பதமுள்ள நெல்லை விரைவில் கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு ஏஐடியூசி தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஏஐடியூசி தொழிற்சங்க மாநில பொது செயலாளர் சந்திரகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட நெல் இயக்கம் செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றன. கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து ஆயிரக்கணக்கான மூட்டைகள் முளைத்து வீணாகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், 22 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாகவும், மத்தியக்குழு விரைவில் முடிவு அறிவித்தவுடன் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறார் .

இந்த இக்கட்டான சூழ்நிலையில் குழு ஆய்வு செய்து அனுமதி அளிப்பதற்குள் பல்லாயிரக்கணக்கான மூட்டைகள் முளைத்து வீணாகி விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் ஜனவரி வரை மழை மற்றும் பனி காலம் என்பதால் இந்த காலத்தில் கண்டிப்பாக அரசு நிர்ணயித்துள்ள 17 சதவீத ஈரப்பதத்தில் மட்டும் நெல் கொள்முதல் செய்வதற்கு வாய்ப்பே இல்லை. எனவே அக்டோபர் முதல் ஜனவரி வரை நிரந்தரமாகவே ஈரப்பத தளர்வு செய்து கொள்முதல் செய்வதற்கான முடிவை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

நெல் கொள்முதலில் விவசாயிகளிடம் தடையின்றி கொள்முதல் செய்ய முன்னேற்பாடு செய்யவும், மழை காலத்தை கணக்கில் கொண்டு ஈரப்பத தளர்வு செய்து கொள்முதல் செய்யவும் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நிர்வாகம் அலட்சியப்படுத்ததியதால் இன்று பிரச்சனை உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையை எதிர்கொள்ள தற்போது டெல்டா மாவட்டங்களில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மாநில அளவிலான உயர் அதிகாரிகள் குழுவினருடன் முகாமிட்டுள்ளனர். பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவது, நியாயமற்ற முறையில் இழப்புத்தொகை வசூலிப்பது போன்ற எதிர்மறையான நடவடிக்கைகளை ஈடுபடாமல் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குழு பொறுப்பேற்று விவசாயிகள் விற்பனைக்கு வைத்துள்ள நெல் வீணாகாமல் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும். மழையில் நனைந்து வீணாகாமல் உடனுக்குடன் நெல் மூட்டைகளை இயக்கம் செய்வதை விரைவுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: