என்னை யாரும் கடத்தவில்லை அதிமுகவினர் மிரட்டலுக்கு பயந்து தலைமறைவானேன்

மதுரை, அக். 21: அதிமுகவினர் மிரட்டலுக்கு பயந்து தலைமறைவாக இருந்ததாக ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், மதுரை கலெக்டரிடம் புகார் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாட்டாமங்கலம் ஊராட்சி தலைவராக பட்டியல் இனத்தை சேர்ந்த கணேசன் (65) உள்ளார். இங்கு ஊராட்சி செயலர் பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு 36 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஊரைச்சேர்ந்த அதிமுக பிரமுகர் சிவபிரகாஷ் தலைமையில் 10 பேர் நேற்று கலெக்டர் வினயிடம் புகார் மனு கொடுத்தனர்.

இதில், ‘‘ஊராட்சி செயலர் பதவியை தனது நெருக்கமானவருக்கு வழங்கும்படி துணைத்தலைவர் பிரதீப், ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை வைத்தார். இதனை ஊராட்சி தலைவர் ஏற்க மறுத்தார். இதனால், கடந்த 16ம் தேதி முதல் ஊராட்சி தலைவரை காணவில்லை. அவரை துணைத்தலைவர் கடத்திச் சென்று விட்டார். அவரை மீட்டு தரவேண்டும்’’ என தெரிவித்திருந்–்தார். இதுதொடர்பாக விசாரிக்கும்படி ஊராட்சி உதவி இயக்குநர் செல்லத்துரைக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து உதவி இயக்குநர் செல்போன் மூலம் ஊராட்சி தலைவர் கணேசனிடம் பேசினார்.

அப்போது அவர், அனுப்பானடியில் உள்ள மகள் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். உடனே கலெக்டர் முன்பு ஆஜராகும்படி செல்லத்துரை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, தலைவர் கணேசன், துணைத்தலைவர் பிரதீப் ஆகியோர் நேற்று கலெக்டர் முன் ஆஜராயினர். இருவரிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார். பின்னர், ஊராட்சி தலைவர் கணேசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘காலியாக உள்ள ஊராட்சிச் செயலர் பதவிக்கு 36 பேர் விண்ணப்பித்திருந்தனர். நாளை (அக். 22) நேர்காணல் நடைபெறுகிறது. இதில் அதிமுக பிரமுகர் சிவபிரகாஷ் மனைவி ஜெயலட்சுமியும் விண்ணப்பித்துள்ளார். இவருக்கு பதவி வழங்கும்படி கடந்த சில நாட்களாக சிவபிரகாஷ் கேட்டு வந்தார். முறைப்படி நேர்காணல் நடத்தி, தேர்வு செய்யப்படுவார் என்றேன். இதனை அவர் ஏற்க மறுத்து, தொகுதி அதிமுக எம்எல்ஏ நீதிபதி எனக்கு சிபாரிசு செய்துள்ளார். அவரிடம் பல லட்சம் பேரம் பேசி பணம் கொடுத்துள்ளேன். அவர் சிபாரிசு செய்யும் நபருக்கு செயலர் பதவி தரவேண்டும் என என்னை தொடர்ந்து மிரட்டினார். இதற்கு பயந்து அனுப்பானடியில் உள்ள எனது மகள் பேச்சியம்மாள் வீட்டில் தங்கி தலைமறைவாக இருந்தேன். என்னை யாரும் கடத்தவில்லை’’ என்றார்.

துணைத்தலைவர் பிரதீப் கூறுகையில், ‘‘எனக்கு சகோதரி யாரும் இல்லை. நான் யாருக்கும் சிபாரிசு செய்யவில்லை. தலைவரை முறைகேடாக நடத்தவில்லை. ஒன்றிய சேர்மனான அதிமுகவை சேர்ந்த ராஜாவும், சிவபிரகாஷ் மனைவியும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால், சேர்மனும் சிபாரிசு செய்துள்ளார். எம்எல்ஏ மற்றும் சேர்மன் பெயரை கூறி தொடர்ந்து மிரட்டல் வந்ததால், நேர்காணல் நடத்தும் வரை தலைவரை அவருடைய மகள் வீட்டில் இருக்க சொன்னேன். அவர் கடத்தப்படவில்லை’’ என்றார். இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: