முசிறி அருகே விவசாயியை அடித்துக் கொன்ற வழக்கில் தந்தை, மகன் கைது

முசிறி, அக்.20: முசிறி அருகே விவசாயியை அடித்துக் கொன்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்துள்ளனர். முசிறி அருகே திருத்தியமலை ஊராட்சிக்குட்பட்ட பச்சனாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (45), இவரது சகோதரன் ராமசாமி(55). இவர் வடக்கிபட்டி எனும் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இருவருக்கும் இடையே நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்குமிடையே அவ்வப்போது கைகலப்பு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 17ம் தேதி தனபாலுக்கும், ராமசாமிக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. அப்போது ராமசாமி மகன் ராமச்சந்திரனுடன்(30) சேர்ந்துகொண்டு சகோதரன் தனபாலை மண்வெட்டி மற்றும் தடியால் தாக்கினார். இதில் படுகாயமடைந்து தனபால் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் குறித்து முசிறி டிஎஸ்பி பிரம்மானந்தன், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இறந்துபோன தனபாலின் உடலை கைப்பற்றி, வழக்கு பதிந்து இக்கொலைக்கு தொடர்புடைய ராமசாமி, ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முசிறி புதிய பஸ் நிலையத்தில் வெளியூர் தப்பி செல்வதற்காக ராமசாமி, மகன் ராமச்சந்திரனுடன் நின்றிருந்தபோது முசிறி போலீசார் அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

Related Stories: