சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு கழிவறையில் பதுக்கி உணவு பொருட்கள் விற்பனை

சமயபுரம், ஏப்.17: பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் முடிகாணிக்கை நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பக்தர்கள் வசதிக்காக ரூ.2.50 கோடி புதிதாக முடிகாணிக்கை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனால் ராஜகோபுரம் அருகில் தேரோடும் வீதியில் உள்ள பழைய முடிகாணிக்கை மண்டம் பயன்பாட்டிற்கு இல்லாமல் உள்ளது. இந்த இடத்தில் சட்டவிரோதமாக தரைக்கடை வியாபாரிகள் சிலர் முடி காணிக்கை மண்டபத்தில் உள்ள கழிப்பறை பூட்டை உடைத்து அங்கு தண்ணீர் பாட்டில், பாப்கான், குளிர்பானங்கள் போன்றவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு கழிப்பறையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில், குளிர்பானங்களை விற்பனை செய்ததாகவும், அதில் மூன்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் வாந்தி பேதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதால், கோயில் இணை ஆணையர் கல்யாணி சம்மந்தப்பட்ட பழைய முடிகாணிக்கை மண்டபத்தில் நேரில் சென்று பார்த்தார். பின்னர் கோயில் பணியாளர்களை வைத்து கழிப்பறையில் பதுக்கி வைத்த தண்ணீர் பாட்டில், குளிர்பானம், பாப்கார்ன், வெள்ளரிக்காய் போன்றவற்றை அப்புறப்படுத்தி சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மேலும் அவற்றை விற்பனை செய்த தரைக்கடை வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கோயில் இணை ஆணையரின் அதிரடி செயலால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

The post சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு கழிவறையில் பதுக்கி உணவு பொருட்கள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: