இடி, மின்னல் சமயங்களில் டிவி, செல்போன், கம்யூட்டர் பயன்படுத்த வேண்டாம்

சேலம், அக்.18: இடி மற்றும் மின்னல் சமயங்களில் டிவி, செல்போன், கம்யூட்டர்களை பயன்படுத்த வேண்டாம் என மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், ஒருசில இடங்களில் மின் விபத்துகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற காலங்களில், பொதுமக்கள் தகுந்த பாதுகாப்புடன் இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சண்முகம் கூறியதாவது: பொதுமக்கள் மின் விபத்துக்களை தவிர்க்க, வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கான மின்சார ஒயரிங் வேலைகளை, அரசு உரிமம் பெற்ற ஒப்பந்தகாரர் மூலமாகவும், ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களைக் கொண்டும் மேற்கொள்ள வேண்டும். பிளக்குகளை பொருத்தும் முன்னரும், எடுக்கும் முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும். பிரிட்ஜ், கிரைண்டர் போன்றவற்றுக்கு எர்த்துடன் கூடிய, 3 பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக இணைப்பு கொடுக்க வேண்டும். உடைந்த சுவிட்ச், பிளக்குகளை உடனடியாக மாற்ற வேண்டும். கேபிள் டிவி ஒயர்களை, மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டாம். ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான எர்த் பைப் போடுவதுடன், அதை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் அமைத்து பராமரிக்க வேண்டும்.

சுவிட்சுகள், பிளக்குள் போன்றவை, குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும். மின் கம்பம் மற்றும் அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயர் மீது கொடி கயிறு துணி காயவைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். மேலும், அவற்றில் கால்நடைகளை கட்ட வேண்டாம். அத்துடன் மின் கம்பத்தை பந்தலாக பயன்படுத்துவதையும், அதன்மீது விளம்பர பலகை கட்டுவதையும் தவிர்க்க வேண்டும். குளியலறையிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த வேண்டாம். மின்சாதனங்களில் தீ விபத்து ஏற்படும் போது, உலர்ந்த மணல், கம்பளி போர்வை, உலர்ந்த ரசாயனப்பொடி அல்லது கரியமில வாயு ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். மாறாக தண்ணீர் கொண்டு அணைக்க வேண்டாம். இடி, மின்னலின் போது வெட்டவெளி, திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்க வேண்டாம். மேலும் அதுபோன்ற சமயங்களில் டிவி, மிக்ஜி, கிரைண்டர், கணினி மற்றும் செல்போன் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

சேலம் மாநகராட்சி வட்டத்திற்குள் ஏற்படும் மின்தடை மற்றும் பழுதை சரிசெய்ய, 94458 51912 (வாட்ஸ்அப்), 1912 (லேண்ட்லைன்), 1800 4251 9122 மற்றும் 0427 2414616, 94458 57471 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதேபோல், செயற்பொறியாளர்களிடம் புகார்களை தெரிவிக்க, சேலம் நகரத்திற்கு 94458 52090, சேலம் கிழக்கு 94458 52310, சேலம் மேற்கு 94458 52320, சேலம் தெற்கு 94458 52330, வாழப்பாடி 94458 52350, ஆத்தூர் 94458 52340 ஆகிய எண்களிலும், மேற்பார்வை பொறியாளரை 94458 52300 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>