மேட்டூர் அருகே பரபரப்பு 6 ஆண்டுகளாக பட்டா வழங்காமல் அலைகழிப்பு தாசில்தார் காலில் விழுந்து பெண் கதறல்

மேட்டூர்,  செப்.30:மேட்டூர் அருகே, வீட்டுமனை பட்டா கேட்டு 6 ஆண்டுகளாக போராடும் பெண், நேற்று தாசில்தார் காலில் விழுந்து கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டூர் அருகே உள்ள பெரியசோரகை திம்மன்வளவை சேர்ந்த  கூலித்தொழிலாளி மாதேஷ் மனைவி விஜயா(35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மாதேஷ் கடந்த 60 ஆண்டுகளாக குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலத்திற்கு பட்டா கேட்டு, கடந்த 6 ஆண்டுகளாக மேட்டூர் தாசில்தார், சப்கலெக்டர், கலெக்டர் மற்றும் முதல்வரிடம் தொடர்ந்து மனு அளித்து வந்தார். ஆனால், எவ்வித பலனுமில்லை. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் மாதேசின் குடிசை சேதமடைந்தது. வேலையின்றி சிரமப்பட்டு வந்த அவரால்,  அந்த கூரையை வேய முடியவில்லை.

இந்நிலையில், நேற்று காலை தனது 3 குழந்தைகள் மற்றும் கணவருடன் விஜயா, மேட்டூர் சப்கலெக்டர் அலுவலகம் வந்தார். தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு, காவிரியில் குதித்து தற்கொலை செய்துகொள்வதாக கூறினார். இதனால் அலுவலர்கள்  அதிர்ச்சியடைந்தனர். அப்போது, அங்கு வந்த மேட்டூர் தாசில்தார் சுமதியிடம் தனது மனுவை கொடுத்த விஜயா, திடீரென அவரது காலில் விழுந்து கதறினார். இதனால் அதிர்ச்சியடைந்த தாசில்தார் சுமதி, அவரை எழுந்திருக்க சொல்லி, விசாரணை நடத்தினார். பின்னர்,  நங்கவள்ளி போலீசாரை  செல்போனில் தொடர்பு கொண்ட அவர், விஜயாவின் கூரை வீட்டை வேய உதவி செய்யும்படி கூறினார். பின்னர், அவரது மனுவை சப்கலெக்டர்  பார்வைக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். இதையடுத்து விஜயா மற்றும்  அவரது குடும்பத்தினர், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: