கழிவறையில் தண்ணீர் இல்லை; எலிகள் தொல்லை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சேவை குறைபாடு

நெல்லை, மார்ச் 20: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் கழிவறையில் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டதாக கூறி நெல்லையை சேர்ந்த பயணி தொடர்ந்த வழக்கில், சேவை குறைபாட்டுக்காக ரயில்வே அதிகாரிகள், ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு பயணிக்கு வழங்கிட நெல்லை நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. நெல்ைல அருகே பேட்டை புனித அந்தோணியார் வடக்கு தெருவை சேர்ந்தவர் முகம்மது அயூப். நெல்லை மாவட்ட ெபாதுநல பொதுஜன சங்கத்தின் தலைவராக உள்ளார். இவர் கடந்த 27-12-2017ம் தேதியன்று சென்னையில் இருந்து நெல்லைக்கு அனந்தபுரி எக்ஸ்பிரசில் எஸ்2 பெட்டியில் வந்துள்ளார். இரவில் ரயில் ஏறியவுடன், இரவு 9.15 மணிக்கு பின்னர் கழிவறையில் தண்ணீர் வரவில்லை. இதனால் ரயிலில் பயணிகள் அவதிக்குள்ளாயினர். பயணிகள் மலஜலம் கழிக்க எத்தனித்தபோது, கழிவறையில் தண்ணீர் இல்லாமல் துர்நாற்றம் வீசியது.

மேலும் அயூப் ரயிலில் கொண்டு சென்ற கேக்குகளை எலிகள் கடித்து சேதப்படுத்தின. இதுகுறித்து அவர் டிக்கெட் பரிசோதகர் மற்றும் ஆர்பிஎப் போலீசாரிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. ரயிலில் கழிப்பறை மற்றும் வாஷ்பேசின் ஆகியவை உரிய நீர் வசதியோடு பராமரிக்கப்படாதது ரயில்வேயின் சேவைக்குறைபாடு எனக்கூறி அவர் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தெற்கு ரயில்வே மதுரை கோட்ட கூடுதல் மேலாளர் உள்ளிட்டோர் இதற்கு பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கு நெல்ைல நுகர்வோர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ், நுகர்வோர் கோர்ட் உறுப்பினர்கள் சிவன்மூர்த்தி, முத்துலட்சுமி ஆகியோர் ரயில்வேயின் சேவைக்குறைப்பாட்டை கருத்தில் கொண்டு அவருக்கு வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரமும், மன உளைச்சலுக்கு ரூ.5 ஆயிரமும் சேர்த்து மொத்தம் ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்கிட உத்தரவிட்டனர். இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்பிவி பால்ராஜ் ஆஜராகி வாதாடினார்.

Related Stories: