பொதுமக்கள் குற்றச்சாட்டு கள்ளிக்குடி முகாமில் உரிய சோதனைக்கு பின் விமான பயணிகள் 28 பேர் வீட்டிற்கு அனுப்பி வைப்பு

திருச்சி, மார்ச் 20: திருச்சி அருகே கள்ளிக்குடி முகாமில் மருத்துவர்களின் சோதனைக்கு பின் விமான பயணிகள் 28 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா நோய் பரவலை தடுக்கும் பொருட்டு 18ம் தேதி இரவு சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் 149 பயணிகளும், மற்றும் துபாயிலிருந்து வந்த விமானத்தில் 177 பயணிகள் என மொத்தம் 326 பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் துபாயிலிருந்து 12 பயணிகள், பயணம் செய்ய தடைசெய்யப்பட்ட மலேசியா நாட்டிலிருந்து 6 பயணிகள் மற்றும் ஜெர்மனியிலிருந்து ஒருவர் மேற்கண்ட நாடுகளுக்கு பயணம் செய்த விவரம் உடைய பயணிகள் 8 பேர் என மொத்தம் 28 பயணிகளை (ஆண்கள்-19, பெண்கள்-9) இவற்றில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்கள்-4 மற்றும் பெண்கள்-3) தனிமைப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. கள்ளிக்குடி தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அரசு ஏற்பாடு செய்த வாகனம் மூலமாக அதிகாலை 3 மணிக்கு வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவதுறையின் மூலமாக உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தனிமைப்படுத்தும் முகாமில் உள்ள மருத்துவர் மூலமாக மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு என பிரத்யோக அறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. அங்கு பயணிகள் அனைவரும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து வருகை புரிந்த சிறப்பு மருத்துவக்குழு மூலம் பரிசோதனை செய்யப்பட்டு அனைவரும் நலமுடன் உள்ளனர் என்பது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் நேற்றிரவு தனிமைப்படுத்தும் முகாமிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் தங்கள் வீடுகளில் தனிமையில் இருக்க வேண்டும் என்றும், சளி, இருமல், தும்மல், காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இவர்கள் மருத்துவக்குழுவினரால் கண்காணிக்கப்பட உள்ளனர்.

Related Stories: