கே.கே.பட்டி அரசு பள்ளியில் தரையில் அமர்ந்து பாடம் படித்த மாணவர்களுக்கு இருக்கை வசதி

கம்பம், மார்ச் 19: தினகரன் செய்தி எதிரோலியால், கேகே பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தரையில் அமர்ந்து படித்த மாணவர்களுக்கு இருக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கம்பம் அருகே உள்ளது காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி. இங்கு 1956ல் அரசு உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. பின் 1997ல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படித்துவந்த இந்த பள்ளியில் தற்போது சுமார் 300 மாணவ, மாணவியர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். மேலும் இப்பள்ளி கருநாக்கமுத்தன்பட்டி அரசுப் பள்ளி, குள்ளப்பகவுண்டன்பட்டி அரசுப்பள்ளி, கேகேபட்டி தனியார் மெட்ரிக் பள்ளிகளின் 10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு மையமாகவும் உள்ளது.

இப்பள்ளியில் பல வகுப்புகளில், டெஸ்க், பெஞ்ச்சுகள் சேதமடைந்ததால் மாணவ, மாணவியர்கள் தரையில் அமர்ந்து சிரமத்துடன் படித்து வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேனி எம்பியான பார்த்திபன் நிதியில் இந்த பள்ளிக்கு இருக்கைகள் வாங்க 5 லட்சம் ரூபாய் ஒதுக்கினார். அதைத்தொடர்ந்து கேகேபட்டி பேரூராட்சி அதிகாரிகள், இந்த பள்ளிக்கு 84 செட்டு இருக்கைகள் வழங்கப்படும் என தலைமை ஆசிரியரிடமும், ஆசிரியர்களிடமும் கூறி உள்ளனர். ஆனால் ஆண்டுகள் இரண்டு ஆகியும் பேரூராட்சி நிர்வாகம், பள்ளிக்கு இருக்கைகள் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து, பள்ளிக்கு இருக்கைகள் வாங்க முன்னாள் அதிமுக எம்பி ஒதுக்கிய நிதி எங்கே? என மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து படிக்கும் படத்துடன் கடந்த மாதம் தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக முதற்கட்டமாக நேற்று முன்தினம் இப்பள்ளிக்கு 42 செட்டு இருக்கைகள் வந்துள்ளது. தேர்வு நேரத்தில் பள்ளிக்கு இருக்கைகள் வந்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து பள்ளி தலைலமை ஆசிரியர் கண்ணன் கூறுகையில், ‘நிதி ஒதுக்கி நீண்டநாளாகியும், பள்ளிக்கு இருக்கைகள் வழங்காததால், பல வகுப்புகளில் மாணவ, மாணவியர்கள் தரையில் அமர்ந்து படித்து வந்தனர்.  இந்நிலையில் தினகரன் செய்தியால் முதற்கட்டமாக நேற்று முன்தினம் இப்பள்ளிக்கு 42 செட்டு இருக்கைகள் வந்துள்ளது. விரைவில் அடுத்த 42 செட்டுகள் வந்துவிடும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். தேர்வு நேரம் இந்த இருக்கைகள் வந்ததால் மாணவர்களுக்கு உட்கார வசதியாக உள்ளது’ என்றார்.

Related Stories: