கொரோனா பீதி எதிரொலி முகாமிலிருந்து அகதிகள் வெளியூர் செல்ல தடை

திருமங்கலம், மார்ச் 19: கொரோனா பீதி எதிரொலியால் திருமங்கலம் உச்சப்பட்டி முகாமிலிருந்து வெளியூர்களுக்கு செல்ல அகதி மக்களுக்கு தடை போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. கடந்த 1989ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த முகாமில் தற்போது 1556 பேர் வசித்து வருகின்றனர்.இவர்களில் பலர் கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கைக்கு செல்லத்துவங்கியுள்ளனர். ஒருசிலர் மீண்டும் இங்கே திரும்பி வருகின்றனர்.

Advertising
Advertising

இந்த மக்களில் பலரும் தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடாக மாநிலங்களில் பெயிண்டிங் வேலைக்கு செல்வது வழக்கம். இந்தநிலையில் தற்போது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளாக இலங்கை அகதி மக்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி முகாம் மக்கள் யாரும் வேலைக்கு வெளியூர் செல்லகூடாது. மதுரை மற்றும் சுற்று வட்டாரபகுதிகளில் மட்டும் வேலைக்கு செல்லவேண்டும். மிகஅவசியம் என்றால் மட்டும் அதிகாரிகளிடம் கேட்டு வெளியூருக்கு செல்லவேண்டும். இலங்கைக்கு செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து யாரும் வரக்கூடாது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முகாம் மக்கள் எடுத்து கொள்ளவேண்டும். தினசரி 5 முறை தங்களது கைகளை கழுவி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். காய்ச்சல், தொடர் இருமல் இருந்தால் உடனடியாக அருகேயுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களை முகாமிலுள்ள கியூ பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: