சேதமடைந்ததை அகற்றி விட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் வாலிநோக்கம் மக்கள் வலியுறுத்தல்

சாயல்குடி, மார்ச் 13:  வாலிநோக்கம் சாலையில் சேதமடைந்த பாலங்களை அகற்றி விட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  கடலாடி ஒன்றியம் வாலிநோக்கத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு மீன்பிடி தொழில், கருவாடு, உப்பளம் போன்ற தொழில்கள் நடந்து வருகிறது. அரசு உப்பளம், தொழிற்சாலை இருப்பதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான லோடு வாகனங்கள் வந்து செல்கிறது. இதுபோன்று வாலிநோக்கம் கடற்கரை இயற்கையில் அழகுமிகுந்து காணப்படுவதால்  உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் பொழுதுபோக்கு சுற்றுலாதலம் போன்று பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இங்கு தர்ஹா இருப்பதால் கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலத்தவர்களும் வந்து செல்கின்றனர். மீன்பிடி தொழில் விறுவிறுப்பாக நடந்து வரும் கடற்கரை என்பதால் மீன் வாகனங்கள், மீனவர் வாகனங்கள் அதிகமாக வந்து செல்கிறது. இந்நிலையில் ராமநாதபுரம்&து£த்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பிலிருந்து 6 கிலோ மீட்டர் தூரம் உள்ள வாலிநோக்கத்திற்கு சாலை உள்ளது. குறிப்பிட்ட தூரத்திற்கு இரண்டு ஆண்டிற்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. மீதமுள்ள பகுதிகள் மிகவும், சேதமடைந்து குண்டு, குழியுமாக கிடக்கிறது.

இச்சாலை வழித்தடத்தில் இரண்டு இடங்களில் சிறிய பாலமும், இரண்டு இடங்களில் பெரிய பாலமும் உள்ளது. இதில் மூன்று பாலங்களிலும் உள்ள இணைப்பு சாலை சேதமடைந்து பள்ளம், மேடாக இருக்கிறது.

இதனால் வேகமாக வரும் கார், இருசக்கர வாகனங்கள் பள்ளத்தினால் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதில் ஒரு பாலத்தின் கீழ் பகுதி வழியாக தனியார் தாமிரம் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து கழிவுநீர் செல்கிறது. அந்த பாலத்தின் அடிபகுதி, மேல்பகுதி முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது. தற்போது இச்சாலையில் குறிப்பிட்ட தூரத்திற்கு புதிய சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் புதிய பாலம் அமைக்காமல் சாலை மட்டும் போடுவதால் பயனில்லை. சேதமடைந்த நிலையில் இருக்கும் பாலம் எப்போதும் விழும் என்ற அபாயம் நிலையில் உள்ளது. எனவே சேதமடைந்த பாலங்களை அகற்றி விட்டு புதிய பாலங்கள் அமைத்து, புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என வாலிநோக்கம் கிராமமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: