ராமநாதபுரம், மார்ச் 24: ராமநாதபுரம் வட்டம், வெண்ணத்தூர் ஊராட்சி, சம்பை கிராமத்தில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். அவர் பேசுகையில், ‘‘மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக அரசின் அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் சம்மந்தப்பட்ட கிராமத்தில் முகாமிட்டு அக்கிராம மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நேரடியாக பெறுவார்கள். மக்களைத் தேடி வந்து மனுக்களை மட்டும் பெறாமல் மனுக்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் இன்று வழங்கப்படுகின்றன. மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இணையதளம் மூலம் அரசின் அனைத்து துறைகளின் திட்டங்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஸ்மார்ட்போன் மூலம் நீங்கள் அறிந்து பயன்பெறலாம். எனவே தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. அதை தகுதியுடையோர் பயன்பெற்றிட வேண்டுமென என தெரிவித்தார்.
தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளி உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, முழுபுலம் பட்டா மாறுதல், குடும்ப அட்டை என 47 பயனாளிகளுக்கு ரூ.3,18,000 மதிப்பீட்டிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் காதலி கருவி, மூன்று சக்கர சைக்கிள் என இரண்டு பயனாளிக்கு ரூ.11,830 மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் விலை இல்லா தையல் இயந்திரம், விலை இல்லா சலவைப் பெட்டி என 10 பயனாளிகளுக்கு ரூ.51,676 மதிப்பீட்டிலும வழங்கப்பட்டது.மேலும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் விலையில்லா தையல் இயந்திரம் 3 பயனாளிகளுக்கு ரூ.21,000 மதிப்பீட்டிலும் வேளாண்மைத் துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.5,406 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறையின் மூலம் கொய்யா பதியன் 1 பயனாளிகளுக்கு 17,580 மதிப்பீட்டிலும் என ஆக மொத்தம் 68 பயனாளிகளுக்கு ரூபாய் 4.25 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கோபு, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், வட்டாட்சியர் சுரேஷ் குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.