சம்பள பேச்சுவார்த்தையை அரசு தொடங்கக் கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடத்தப்போவதாக அறிவிப்பு

மதுரை, மார்ச் 11: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயரவு ஒப்பந்தம் அமலாக்க வேண்டும். இதன்படி, 13வது ஊதிய ஒப்பந்த காலம் கடந்தாண்டு ஆக.31ம் தேதியுடன் முடிந்துவிட்டது. செப்.1ம் தேதி முதல் 14 வது ஊதிய ஒப்பந்தம் அமலாகியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையே துவங்கவில்லை. இதை வலியுறுத்தி தொமுச உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் சார்பில், போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கும், அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும், நிர்வாகம் தரப்பில் கண்டுகொள்ளவில்லை.

இதனால், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் நிர்வாகத்திடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதன்படி போக்குவரத்து கழக அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் துவங்கியது. பைபாஸ் ரோட்டில் உள்ள மண்டல அலுவலகத்தின் முன் துவங்கிய போராட்டத்திற்கு தொமுச மண்டல பொதுச்செயலாளர் மேலூர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, பணியாளர் சம்மேளனம், எச்எம்எஸ், ஏஏஎல்எல்எப், டியூசிசி மற்றும் திராவிட தொழிலாளர் சம்மேளனம் ஆகிய சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இது குறித்து மேலூர் அல்போன்ஸ் கூறுகையில், ‘தொழிலாளர்களின் ேகாரிக்கையை அரசும், நிர்வாகமும் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது. பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஒரு மாதத்திற்கு முன்பே நோட்டீஸ் கொடுத்தும், அரசு கண்டுகொள்ளவில்லை. தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து போக்குவரத்து சேவைப்பணி பாதித்தால், அதனால் ஏற்படும் அனைத்து விதமான பாதிப்புகளுக்கு அரசும், போக்குவரத்து கழக நிர்வாகமுமே பொறுப்பு’ என்றார்.

Related Stories: