மதுரை அரசு மருத்துவமனையில் உலக காது கேளாதோர் தினம் குழந்தைகள், முதியோருக்கு இலவச கருவி

மதுரை, மார்ச் 11: மதுரை அரசு மருத்துவமனை காது, மூக்கு தொண்டை சிகிச்சை துறை சார்பில் உலக காது கேளாதோர் தின வார விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள இத்துறையின் ஆடிட்டோரியத்தில் காது கேட்புத்திறன் இழப்பு குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தினசரி ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது. இதில், பிறக்கும் போதே காதுகேளாமை, குழந்தைகளுக்கு காதில் சீல் வடிந்து கேட்புத்திறன் பறிபோவது, முதியோர்களுக்கு ஏற்படும் காதுகேளாமைக்கான காரணங்கள் குறித்தும், பிறக்கும் போதே செவிக்குறைபாடுடைய குழந்தைகளுக்கு இலவசமாக காதுகேட்பு கருவி பொருத்துதல், முதியோருக்கான காது கேட்புத்திறன் கருவிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், உலக காதுகேளாதோர் தின நிறைவு விழா கருத்தரங்கம் நேற்று நடந்தது. மருத்துவமனை டீன் சங்குமணி தலைமை வகித்தார். மருத்துவக்கண்காணிப்பாளர் ஹேமந்த்குமார், நிலைய மருத்துவ அதிகாரி ரவீந்திரன், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவின் துறைத்தலைவர் டாக்டர் தினகரன், பேராசிரியர்கள் அருள், தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, காது கேளாமையும் அதற்கான காரணங்களும், தீர்வுகளும் மற்றும் சிகிச்சை முறைகளும் குறித்துப் பேசினர். மேலும், காது கேட்புத்திறன் இழந்த குழந்தைகள் மற்றும் முதியோர்கள் 5 பேருக்கு செவித்திறன் கருவி இலவசமாக வழங்கப்பட்டது.  

Related Stories: