ஊட்டச்சத்து வார விழாவில் பெண்களுக்கு கோலப்போட்டி

ராமநாதபுரம், மார்ச் 10: ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார். மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து, பச்சிளங்குழந்தைகள், வளரிளம் பெண்கள், மகளிர் உள்ளிட்டோருக்கு ஏற்படும் உடல் ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு இடர்பாடுகளை களைந்திடும் நோக்கில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,454 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் என முறையே கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், மகளிரிடத்தில் காணப்படும் ரத்தசோகை, எடை குறைவான குழந்தை பிறப்பு, 0-6 வயதுடைய குழந்தைகளிடத்தில் காணப்படும் உடல் மெலிவு மற்றும் உயரத்திற்கேற்ற எடையின்மை போன்ற பாதிப்புகளை தடுத்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டில் கடந்த 8ம் தேதி முதல் 22ம் தேதி வரையில் ஊட்டச்சத்து இருவார விழா” கடைபிடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஊராட்சி அளவில் ஆரோக்கிய உணவுப் பழக்க வழக்கம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பாக ‘அனைவருக்கும் ஊட்டச்சத்து அதுவே நம் சொத்து” என்ற தலைப்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம் முதல் பரிசும், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் இரண்டாம் பரிசும், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மூன்றாம் பரிசும் பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் வீரராகவ ராவ் பரிசு, கேடயம் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் மாரியம்மாள் உட்பட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: