மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 8,494 திட்ட பணி அனுமதிக்கு காத்திருப்பு

கோவை, மார்ச் 10:  கோவை மாவட்டத்தில்  228 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் (100 நாள் வேலை வாய்ப்பு) பணி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்ட அளவில் 1.19 லட்சம் தொழிலாளர்கள் குடும்பத்தினர் வேலை வாய்ப்பு அடையாள அட்டை பெற்றுள்ளனர். மொத்த தொழிலாளர்களில் 82.70 சதவீதம் பேர் பெண்கள். 47.14 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட மக்கள். தினசரி கூலியாக வேலையை பொருத்து 170 ரூபாய் முதல் 224 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. 2019-2020ம் ஆண்டில் பல்வேறு துறைகளில் 8,570 திட்ட பணிகள் நடத்தப்பட்டது. இன்னும் 8,494 திட்ட பணிகள் பல மாதங்களாகியும் துவக்கப்படாமல் அனுமதிக்காக காத்திருப்பு நிலையில் இருக்கிறது. 6,520 திட்ட பணிகளுக்கு ஊரக வளர்ச்சி முகமையினர் அனுமதி வழங்கவில்லை. 12 ஊராட்சி ஒன்றியங்களில் 597 திட்ட பணிகள் நிலுவையில் இருக்கிறது. 149 பணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

வறட்சி தொடர்பாக 190 திட்ட பணிகள் முடிக்கப்பட்டது. 277 பணிகள் அனுமதிக்காக காத்திருப்பில் வைக்கப்பட்டது. பாரம்பரிய நீர் நிலைகள் சீரமைப்பிற்காக 2 பணிகள் மட்டுமே நடத்தப்பட்டது. 104 பணிகள் அனுமதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் தொடர்பாக 467 பணிகள், குடிநீர், நீர் பாசனம் தொடர்பாக 2056 பணிகள், நிலம் சீரமைப்பு தொர்பாக 414 பணிகள் முடங்கி கிடக்கிறது. வேலை வாய்ப்பு நாட்கள் அதிகரித்த போதிலும் தொழிலாளர்களுக்கு போதுமான வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. வழக்கமாக வெயில் காலங்களில் கிராம மக்களுக்கு போதுமான வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. வறட்சியால் விவசாய பணிகள் வெகுவாக குறைந்திருப்பதால், பொதுமக்கள் பலர் ஊரக வேலை திட்டத்தில் பணிக்காக காத்திருக்கின்றனர். ஆனால் ஊரக வளர்ச்சி முகமையினர் வெயில் காலத்தில் பணிகளை போதுமான அளவு ஒதுக்காமல் காலம் கடத்தி வருகின்றனர்.

பதிவு செய்த மொத்த தொழிலாளர்களில் தினமும் 10 முதல் 15 சதவீதம் பேர் கூட வேலை வாய்ப்பு பெற முடியாமல் தவிக்கின்றனர். ஊரக வளர்ச்சி முகமையினர் மத்திய அரசிடம் இருந்து போதுமான நிதி ஒதுக்கீட்டை பெறாததால் பணி ஒதுக்கீடு குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது. வேலை கிடைக்காத நிலையில் கிராம மக்கள் நகர பகுதிக்கு வேலைக்காக செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘ஒரு ஆண்டில் 150 நாளுக்கு வேலை தருவதாக அறிவித்தார்கள். ஆனால் கிராமங்களில் 70 முதல் 80 நாளுக்கு கூட வேலை கிடைப்பதில்லை. வேலை நேரமும், அளவும் குறைந்துவிட்டது. முழு தினக்கூலி, அதாவது 224 ரூபாய் பெறும் வகையில் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. வேலை எப்போது கிடைக்கும் என ஊராட்சி அலுவலகத்தின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டியுள்ளது. வேலை வாய்ப்பை அதிகரிக்கவேண்டும். கிராமங்களில் 5 கி.மீ, தூர சுற்றளவிற்குள் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.

Related Stories: