கறம்பக்குடி ராட்டின குளத்தில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்

கறம்பக்குடி, மார்ச் 6: கறம்பக்குடி ராட்டின குளத்தை தாசில்தார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கழிவுகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் அனைத்திலும் பாசன, விவசாய குளங்கள் ஏராளமாக காணப்படுகின்றன. பெரிய குளம், குட்டை குளம், குமரக் குளம், ராட்டின குளம் போன்ற பல்வேறு குளங்கள் உள்ளன.

பேருந்து நிலையம் பகுதியில் கோழி கிடாப்பு குளம் மற்றும் ராட்டின குளம் உள்ளது. ராட்டினகுளம் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்து பாசன விவசாய குளமாக இருந்து வந்தது. இந்த குளம் மூலம் சுமார் 100 ஏக்கர் பாசன ஆயக் கட்டு விவசாயிகள் விவசாயம் செய்து பயன் பெற்று வந்தனர். கடந்த பல ஆண்டுகளாக மழை காலங்களில் வாய்க்கால் வரத்துகள் மூலம் மழை நீர் வந்து குளம் முழுவதும் நிரம்பி காணப்படும். இதன் மூலம் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக வாய்க்கால் வரத்துகள் அனைத்தும் தூர்ந்து போய் காணப்படுவதால் குளம் வற்றி தண்ணீர் இன்றி காணப்படுகிறது.

இதன் காரணமாக குளம் முழுவதும் புதர் செடிகள் உருவாகி குளம் இருப்பதே இல்லாத அளவிற்கு காணப்படுகிறது. இதன் காரணமாக மேலும் குறிப்பாக பல்வேறு இறைச்சி கழிவு பொருட்களை கொண்டு வந்து கொட்டுவதால் துர் நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் நிலையில் உள்ளது. இந்த கழிவுப் பொருட்களை அகற்றவும் மேலும் புதர் செடிகள் முழுவதையும் அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் பாசன ஆயக் கட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் காரணமாக கறம்பக்குடி தாசில்தார் சேக் அப்துல்லா தலைமையில் வருவாய் துறை அலுவலர்கள் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தாசில்தார் சேக் அப்துல்லா உடனடியாக பாசன ஆயக்கட்டு விவசாயிகளிடம்.  குளம் முழுவதும் மண்டி கிடக்கும் புதர் செடிகள் அனைத்தையும் முழுவதுமாக அகற்ற உத்தரவிட்டார்.

மேலும் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் குளத்தில் கொட்டப் படும் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டதோடு கழிவு பொருட்களை கொண்டு வந்து கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஆய்வின்போது பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினர், ராட்டினகுளம் பாசன ஆயக்கட்டு விவசாயிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Related Stories: