கழிவுநீர், ஆக்கிரமிப்பால் மாசுபடும் தாமிரபரணி ஆறு முதல்வரிடம் புகார்

ஏரல்,  மார்ச் 5: கழிவுநீர், ஆக்கிரமிப்பால் மாசுபடும் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்கக் கோரி தாமிரபரணி அறக்கட்டளை செயலாளர் ஏரல் குருசாமி, தமிழக முதல்வருக்கு மனு  அனுப்பியுள்ளார். இயற்கை எழில்கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில்  பொதிகை மலை உச்சியில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி  மாவட்டத்தில் பாய்ந்து மக்களின் குடிநீர் தேவையை மட்டுமின்றி  பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, வெற்றிலை கொடிக்கால் என  விவசாய தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.

ஆனால், அண்மைகாலமாக  தாமிரபரணி ஆற்றில் பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவு நீரும், பல்வேறு  இடங்களில் கழிவுநீரும் கலப்பதால் மாசுபடுகிறது. மேலும் ஆற்றில் இறக்கி  வாகனங்களை கழுவுவதாலும் தண்ணீர் மாசுப்படுகிறது. மேலும், ஆற்றுப்படுகைகளை  தனியார் ஆக்கிரமிக்கும் அவலமும் தொடர்கிறது. அத்துடன் சீமை கருவேல மரங்கள்  அடர்ந்து வளர்ந்து ஆற்றில் புதை மண்டிக் கிடக்கின்றன.

எனவே, இத்தகைய  அவலங்களில் இருந்து தாமிரபரணி நதியை பாதுகாத்திட அரசு தக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இக்கோரிக்கையை நிறைவேற்றுமாறு தாமிரபரணி அறக்கட்டளை செயலாளரான  ஏரலைச் சேர்ந்த குருசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். இதே போல் நெல்லை, தூத்துக்குடி கலெக்டர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மனுக்கள் அனுப்பியுள்ளார்.

Related Stories: