உலக செவித்திறன் தின விழிப்புணர்வு

கோவை, மார்ச் 5: கோவை அரசு மருத்துவமனையில் உலக செவித்திறன் தின குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ம் தேதி உலக செவித்திறன் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான நோக்கம் செவித்திறன் நம் வாழ்விற்காக, காது கேளாமை உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்த அனுமதிக்காதீர். இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையின் இ.என்.டி. துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதனை மருத்துவமனையின் டீன் அசோகன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கோவை போலீஸ் கமிஷனர் சுமித் சரண் கலந்துகொண்டார். இதில், போக்குவரத்து காவல்துறையினருக்கு செவித்திறன் குறித்த பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், பொதுமக்கள் செவித்திறன் குறைப்பாட்டை ஆரம்பத்தில் கண்டறியவும், பாதுகாக்கும் வகையிலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு பிறவி காது கேளாமை குறைபாட்டினை கண்டறியும் வகையில் திரையிடல் சோதனை முகாம் நடந்தது. நிகழ்ச்சியில், மருத்துவமனையின் டீன் அசோகன் பேசுகையில், “குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால் பல்வேறு கட்ட சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியும்.அரசு மருத்துவமனையில் காது கேளாமை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு காக்ளியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் இது போன்ற பரிசோதனைக்கு ரூ.6 லட்சம் வரை செலவாகும்” என்றார்.

Related Stories: