தேர்வு எழுதும் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

ராமநாதபுரம், மார்ச் 4: ராமநாதபுரத்தில் பிளஸ்2 அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையமான சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் வீரராகவ ராவ் நேற்று முன்தினம் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், பிளஸ் 2 தேர்வை மாவட்டம் முழுவதும் மொத்தம் 60 மையங்களில் 149 பள்ளிகளை சேர்ந்த 6,941 மாணவர்கள், 7,824 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 268 மாணவர்கள் என மொத்தம் 15,033 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

மேல்நிலை பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 65 தலைமை ஆசிரியர்களும், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர்களாக 65 ஆசிரியர்களும், அறைக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்ற 919 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வுகளில் முறைகேடுகள் செய்தல் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு கலெக்டர் தலைமையிலும், கல்வி அலுவலர்கள் தலைமையிலும் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு மொத்தம் 139 ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பறக்கும் படையினர் தேர்வு மையங்களை எந்த நேரத்திலும் திடீரென பார்வையிட்டு ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கண் பார்வையற்ற, காது கேளாத, உடல் உறுப்புகளில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் சிரமமின்றி தேர்வெழுதும் வகையில் சொல்வதை கேட்டு எழுதுபவர்கள் என 11 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு தேர்வெழுதும் நேரத்தில் கூடுதலாக 1 மணி நேரம், மொழிப்பாட விலக்கு போன்ற சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுதிடும் வகையில் தேவையான போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வெழுதும் மாணவர்களைத் தவிர வெளியாட்கள் எவரும் தேர்வு மையத்திற்குள் நுழையாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.

Related Stories: