பூண்டி அருகே வில்லங்கமாக பாடம் நடத்திய ஆசிரியைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், மார்ச் 3: திருவள்ளூர் அருகே வெள்ளாத்துக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலை பள்ளியில், மாணவர்களை தரம்பிரித்து பாடம் நடத்தும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்பாமல் பள்ளியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்டது வெள்ளாத்துக்கோட்டை கிராமம். இக்கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி இயங்கிவருகிறது. ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், 52 மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஈஸ்வரி தேவி என்பவர், மாணவர்களை தரம்பிரித்து உட்காரவைத்து, பாடம் நடத்துவதாக கூறப்படுகிறது, இதுகுறித்து, மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்குமாறு, பெற்றோர் உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து பெற்றோர்கள், நேற்று தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல், ஆசிரியை மீது நடவடிக்கைக்கோரி பள்ளியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பென்னலூர்பேட்டை போலீசார் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ரவிக்குமார் ஆகியோர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் 10 நாட்களுக்குள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, போராட்டத்தை பெற்றோர் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: