செங்குன்றம் அருகே பெண்கள் எளிதில் சென்று வரும் வகையில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

அம்பத்தூர், ஏப்.26: பெண் புகார்தாரர்கள் எளிதில் சென்று வரும் வகையில் செங்குன்றம் அருகே மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை பெருநகர காவல் ஆணையரகம் நிர்வாக வசதிக்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும் மூன்றாக பிரிக்கப்பட்டு சென்னை, ஆவடி, தாம்பரம் என மூன்று ஆணையர்கள் கீழ் இயங்கி வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக பிரிக்கப்பட்டதாக கூறப்படும் காவல் நிலையங்கள் தற்போது பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் ஆவடி காவல் மாவட்டம் மற்றும் செங்குன்றம் காவல் மாவட்டம் எனப் பிரிக்கப்பட்டு 2 துணை கமிஷனர்கள் தலைமையில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏற்கனவே 3 காவல் நிலையங்களுக்கு ஒரு உதவி கமிஷனர் மேற்பார்வையில் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் இருந்தது. தற்போது செங்குன்றம் காவல் மாவட்டத்தின் கீழ் செங்குன்றம், மீஞ்சூர், சோழவரம், காட்டூர், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர், மாதவரம் பால் பண்ணை, மணலி, மணலி நியூ டவுன், எண்ணூர் மற்றும் சாத்தங்காடு என 12 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் எண்ணூர் மற்றும் அம்பத்தூரில் 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் செங்குன்றம், மீஞ்சூர், சோழவரம், காட்டூர், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர் ஆகிய காவல் நிலைய எல்லைக்குள் வரும் சிறுமிகள், பெண்கள் பிரச்னையை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

இதேபோல் மாதவரம் பால் பண்ணை, மணலி, மணலி நியூ டவுன், எண்ணூர் மற்றும் சாத்தங்காடு ஆகிய காவல் நிலைய எல்லையில் உள்ள பெண்கள் பிரச்னைகளை எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர். அந்த வகையில் மீஞ்சூர், சோழவரம், காட்டூர் பகுதியில் இருந்து புகார் கொடுக்க வரும் பெண்களுக்கு நேரடி போக்குவரத்து இல்லாததால் 2 மணி நேரம் பயணத்திற்கு பின் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் வந்து புகார் அளிக்கும் கட்டாயத்தில் உள்ளனர். சில நேரங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிகாரிகள் இல்லாததால் மறுநாள் செல்வதிலும், அடுத்தடுத்த விசாரணைக்கு செல்வதிலும் பெரும் இன்னலுக்கு உள்ளாவதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் பெண் புகாரர்கள் பயண தூரத்தை கருத்தில் கொண்டு, பெரும்பாலானோர் புகார் கொடுக்கச் செல்வதில்லை. மேலும் தொடர்ந்து போலீசாரின் விசாரணைக்கு அடிக்கடி வரவழைப்பதால் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் கூறப்படுகிறது.

எனவே புகார்தாரர் நலன் கருதி மீஞ்சூர் புகாரர்களுக்கு அருகில் உள்ள எண்ணூர் காவல் நிலையத்தில் விசாரிக்கும் படி வழிவகை செய்ய வேண்டும் என்பதும், செங்குன்றம் பகுதியில் மேலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பதும் பொது மக்களின் தலையாய கோரிக்கையாக உள்ளது. மேலும் தற்போது பாலியல், வரதட்சணை, பெண்கள் குறித்த புகார்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு இருப்பது போல் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது.

The post செங்குன்றம் அருகே பெண்கள் எளிதில் சென்று வரும் வகையில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: