தா.பழூர், மார்ச்3: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிலால் கடைவீதியில் இருபுறங்களிலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அரியலூர், தஞ்சை, கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களையும் இணைக்கும் பிரதான பாலமாக உள்ள அணைக்கரை பாலம் பழுதடைந்ததால் தா.பழூர் வழியாக மதனத்தூர் பாலத்தை பயன்படுத்தி பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் சென்று வருகின்றன. இவை சிலால் கடைவீதி வழியாக அணைக்கரை கும்பகோணம் செல்வதால் போதிய சாலை வசதி இல்லாததாலும் கடைகள் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் இருந்தது.
மேலும் சாலையின் இருபுறங்களிலும் காய்கறி கடைகள் ,தள்ளுவண்டியில் விற்பனை உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் இருந்ததால் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது .ஆகையால் அவற்றை அகற்றும் பொருட்டு சாலையில் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைதுறையினர் அகற்றினர்.அரியலூர் கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன், உதவி கோட்ட பொறியாளர் சிவராஜ் ,உதவி பொறியாளர் சண்முகசுந்தரம் ஆகியோரின் அறிவுறுத்தலின் பெயரில் சாலை ஆய்வாளர் கவிதா மற்றும் சாலைப் பணியாளர்களை கொண்டும் பொக்லைன் இயந்திரம் மூலமும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தா.பழூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.