ஆலத்தூர் வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகள்

 

பாடாலூர், அக்.25: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரத்தில் நடந்து வரும் வேளாண் திட்ட பணிகளை வேளாண் கூடுதல் திட்ட இயக்குநர் சக்திவேல் ஆய்வு செய்தார். அதன்படி ஆமணக்கு, ஏத்தாப்பூர் ரக விதைப் பண்ணை வயல்கள், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணை, மக்காச்சோள சிறப்பு திட்ட செயல் விளக்க வயல்களை பார்வையிட்டார்.

மேலும் ஆலத்தூர் வேளாண் கிடங்கினை பார்வையிட்டதுடன் பணமில்லா பரிவர்த்தனையான கூகுள் பே, போன் பே மற்றும் ஏடிஎம் கார்டு மூலம் விவசாயிகள் எளிய முறையில் பணம் செலுத்த ஊக்குவித்து, பணமில்லா பரிவர்த்தனை செய்து மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெற்பயிரில் ஜிங்க் சல்பேட் மற்றும் ஜிப்சம் இடுதலை ஊக்குவிக்கும் வகையில் ஜிங்க் சல்பேட் இடுபொருள் மற்றும் தேசிய எண்ணை வித்துக்கள் இயக்கத்தின் கீழ் இயற்கை விவசாயங்களை ஊக்குவிக்கும் வகையில் பயிர் பாதுகாப்பு இடுபொருளான வேப்பெண்ணெய் போன்ற இடுபொருட்களை வேளாண் கூடுதல் இயக்குநர் சக்திவேல் வழங்கினார்.

இதை தொடர்ந்து ஆலத்தூர் வேளாண் கிடங்கில் கம்பு, குதிரைவாலி, நிலக்கடலை, உளுந்து, பாசிப்பயிறு, எள் மற்றும் நுண் சத்துக்களை பார்வையிட்டார். தொடர்ந்து ஆலத்தூரில் அனைத்து நிலை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கீதா, துணை இயக்குநர் பாபு (மத்திய திட்டம்), துணை இயக்குநர் பழனிசாமி, (உழவர் பயிற்சி நிலையம்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராணி, ஆலத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் பச்சியம்மாள், ஆலத்தூர் வட்டார வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர்கள், அட்மா அலுவலர்கள், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள் மற்றும் கிடங்கு மேலாளர்கள் பலர் பங்கேற்றனர்.

The post ஆலத்தூர் வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: