திருமயம், அரிமளம் பகுதி விளை நிலங்களில் ஆபத்தான மின்கம்பிகளால் உயிர் பலி அபாயம்

திருமயம்,மார்ச்3: திருமயம், அரிமளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் எட்டி தொடும் உயரத்தில் தொங்கும் மின் கம்பிகளால் விவசாயிகள் அச்சத்துடன் உள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அரிமளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் மட்டம் கிடுகிடுவென குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கோடை காலம் மட்டுமல்லாது பருவ காலத்திற்கும் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதே சமயம் ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளில் இருந்து நீர் மூழ்கி மோட்டர் மூலம் நீரை எடுக்க வேண்டி உள்ளது. இதற்காக விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வேண்டி தட்கல் முறையில் விண்ணப்பிப்பது அதிகரித்து வருகிறது.

இதனிடையே விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வழங்க நடப்பட்டுள்ள மின்கம்பங்கள் முறையாக நடப்படாததால் மின்கம்பிகள் மிக தாழ்வாக ஆபத்தான முறையில் தொங்குவதாகவும்,ஒரு சில பகுதிகளில் ஒருவர் நடந்து செல்லும் போது கூட தலையில் தட்டும் அளவிற்கு மின்கம்பிகள் தாழ்வாக தொங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது மின்சார வாரியத்திற்கு தொிந்தும் இதனை சாி செய்ய யாரும் முனவரவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமயம், அரிமளம் பகுதி விவசாய நில பகுதிகளில் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபதே பெரும்பாலன விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து அரிமளம் பகுதி விவசாயிகளிடம் கேட்ட போது விவசாய நிலங்களுக்குள் மின் கம்பிகள் தாழ்வாக தொங்குவது அரிமளம் பகுதியில் மட்டும் உள்ள பிரச்னை இல்லை இது போன்று மாவட்டம் முழுவதும் உள்ள விவசாய நிலங்களில் நிலவுகிறது. இதற்கு காரணம் 3 மின்கம்பங்கள் நட வேண்டிய இடத்தில் மின்சார வாரியம் சிக்கனம் கருதி இரண்டு மின்கம்பங்கள் மட்டுமே நடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பராமாிப்பு இல்லாததால் வெயில் காலங்களில் மின்கம்பிகள் வெப்பத்தில் இளகி தொங்க ஆரம்பிக்கிறது.

தொடர் பராமரிப்பு இல்லாததால் இது மேலும் தாழ்வாக தொங்கி ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகிறது. இந்நிலையில் ஒரு சில பகுதியில் விளை நிலங்களுக்குள் உழவு இயந்திரம்,கதிர் அறுக்கும் இயந்திரம் கூட வர முடியாத அளவிற்கு மின் கம்பிகள் தாழ்வாக தொங்குகிறது. திருமயம், அரிமளம் பகுதி வயல்களில் கைகளால் தொடும் அளவிற்கு மின்கம்பிகள் தொங்குவதால் உயிர்பலி ஏற்படுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரிமளம் பகுதியில் உள்ள விவசாய நிலப்பகுதிக்குள் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சாி செய்யும் பொருட்டு கூடுதல் மின் கம்பங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: