பொக்காபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா கல்லட்டி, முதுமலை வழித்தடங்களில் 3ம் தேதி வரை இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி

ஊட்டி, மார்ச் 1: பொக்காபுரம் மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு 3ம் தேதி வரை இரவு நேரங்களில் தெப்பக்காடு-கூடலூர் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊட்டி அருகேயுள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 28ம் தேதி துவங்கியது. கரகம் எடுத்தல் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். முக்கிய விழாவான தேர் பவனி நாளை இரவு நடக்கிறது. இதில், பல ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள். இதனால், விழா நடக்கும் நான்கு நாட்கள் கல்லட்டி மற்றும் தொரப்பள்ளி வழித்தடங்களில் பக்தர்களின் வாகனங்கள் இரவு நேரங்களில் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.  இது குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கவுசல் கூறுகையில், ‘‘பொக்காபுரம் மாரியம்மன் கோயில் திருத்தேர் விழாவையொட்டி,  பக்தர்களின் வசதிக்காக, 3ம் தேதி வரை கல்லட்டி மலை பாதையில் பக்தர்கள் இரவு நேரங்களில் சென்று வர சிறப்பு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கூடலூர் - தெப்பக்காடு, மசினகுடி - பொக்காபுரம் சாலையில் இரவு நேர வாகனப் போக்குவரத்து தடையானது தளர்த்தப்படுகிறது.

3ம் தேதி வரை இச்சாலையில் எந்நேரமும் வாகனங்கள் சென்று வர போக்குவரத்திற்கு தடையேதுமில்லை. பொக்காபுரம் கோயில் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புடனும், பொறுமையாகவும் வாகனங்களை இயக்கி கோயிலுக்கு சென்று வர வேண்டும். பொதுமக்கள் முதுமலை புலிகள் காப்பகம் சாலை ஓரங்களில் சமையல் செய்வதையோ, தீ மூட்டுவதோ, பட்டாசு வெடிப்பதையோ, பிளாஸ்டிக் கழிவுகளை வீசுவதோ, மேளம் கொட்டுவதையோ கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது வன விலங்குகள் பாதுகாப்பு சட்டப்பட்டி நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்,’’ என்றார்.

Related Stories: