கோத்தகிரி லாங் வுட் சோலையில் இயற்கை முகாம்

ஊட்டி, ஏப்.30: நீலகிரி வனத்துறை, கோவை வன பணியாளர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஓசை அமைப்பின் சார்பாக கோத்தகிரி அருகே உள்ள லாங் வுட் சோலையில் இயற்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, கோத்தகிரி வனச்சரகர் செல்வராஜ் துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீலகிரி மாவட்டம் கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக இருப்பதை விளக்கினார்.
லாங் வுட் சோலை பாதுகாப்பு குழுவின் செயலர் கே.ஜே.ராஜு சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்டு பேசுகையில், ‘‘லாங் வுட் சோலை 18 கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலும், லாங் வுட் சோலை ஒரு பல்லுயிர் சூழல் மையமாக விளங்குகிறது. மேலும், கோத்தகிரியின் மைக்ரோ கிளைமேட் எனக்கூடிய காலநிலையும் நிர்ணயிக்கிறது.

பல விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் வாழிடமாக அமைந்துள்ளது. லாங் வுட் சோலை பாதுகாப்பு குழு வனத்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே உறவு பாலம் அமைத்து கொடுத்திருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த பாதுகாப்பு குழு மக்களிடையே காடுகளை காக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளது’’ என்றார். இந்த கருத்தரங்களில் கோவை, திருப்பூர், கரூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த இயற்கை முகாமில் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவை ஓசை அமைப்பின் இயக்குனர் காளிதாஸ் செய்திருந்தார். கவிஞர் அவைநாயகன் அனைவரையும் வரவேற்றார். சென்னை ஆனந்த் குமார் நன்றி கூறினார்.

The post கோத்தகிரி லாங் வுட் சோலையில் இயற்கை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: