குற்றச்சாட்டை திரும்ப பெற வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மார்ச் 3ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈரோடு, பிப்.28: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட 17ஆ குற்றச்சாட்டையும், ஒழுங்கு நடவடிக்கையையும் திரும்ப பெற  வலியுறுத்தி வரும் மார்ச் 3ம் தேதி மாநிலம் தழுவிய அனைத்து வட்டார  தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் பாஸ்கர்பாபு கூறியதாவது: 1-4-2003ம் ஆண்டிற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும் என்பன உட்பட 12 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2019ம் ஆண்டு ஜாக்டோ ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது 17ஆ குற்றச்சாட்டு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை பிறப்பிக்கப்பட்டது. இதனால், கடந்த ஓராண்டில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி ஓய்வில் செல்ல முடியாமல் தற்காலிக பணி நீக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஊழியர்கள் நலன்கள் மற்றும் குடும்ப நலன்களை கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட 17ஆ குற்றச்சாட்டு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை அனைத்தையும் திரும்ப பெற வேண்டும்.

இதேபோல், போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், அரசு ஊழியர்கள் சங்க பொறுப்புகளில் வகித்து வந்த 4 அதிகாரிகள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர்களுக்கு பதில் அளிக்க வாய்ப்பளிக்காமல் மாவட்ட அலகில் இருந்து தொலை தூர மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட மாவட்ட மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்து, மீண்டும் அவர்கள் பணியாற்றிய மாவட்டத்திலேயே பணியிட மாறுதல் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் மார்ச் 3ம் தேதி மதியம் 1 மணிக்கு மாநிலம் தழுவிய அளவில் வட்டார தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: