முதுகுளத்தூர் அருகே சிறுமணியேந்தல் மகளிர் சுகாதார வளாகம் சேதமடைந்து கிடக்கும் அவலம்

சாயல்குடி, பிப். 28: முதுகுளத்தூர் அருகே சிறுமணியேந்தல் கிராமத்தில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் சேதமடைந்து கிடப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார்  கூறுகின்றனர். முதுகுளத்தூர் ஒன்றியம், மேலக்கன்னிச்சேரி ஊராட்சி, சிறுமணியேந்தல் கிராமத்தில் 2004-2005ம் ஆண்டுகளில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, குளியலறை, துணி துவைக்கும் இடம் மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டது. இரவு நேரங்களிலும் பொதுமக்கள் பயன்படுத்த வசதியாக தெருவிளக்கு மற்றும் கட்டிடத்தில் போதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. தற்போது போதிய பராமரிப்பின்றி சுகாதார வளாகம் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கட்டிடத்தின் பெரும்பாலான பகுதி இடிந்தும், இரும்பு கதவுகள் அனைத்தும் சேதமடைந்து கிடக்கிறது. அருகிலுள்ள போர்வெல், தண்ணீர் தொட்டியும் இடிந்து தரைமட்டமாக கிடக்கிறது.

இதனால் பொதுமக்கள் போதிய கழிப்பறை வசதியின்றி திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் காட்டுபகுதிக்கு செல்ல முடியாமலும், விஷசந்துகள் தீண்டும் அபாயம் இருப்பதாகவும், இந்த ஊராட்சியில் தற்போது வீடுகளில் மானியத்தில் கட்டிகொடுக்கப்படும் தனிநபர் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் கழிப்பறையின்றி கடும் அவதிப்பட்டு வருவதாக பெண்கள் கூறுகின்றனர். மேலும் இக்கிராமத்தில் கிராமத்தில் தண்ணீர் வசதி உள்ளது. சுகாதார வளாகத்தை மராமத்து செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், குளிப்பதற்கு, துணிகள் துவைப்பதற்கு பயன்படும். எனவே இங்குள்ள சுகாதார வளாகத்தை மீண்டும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: