பழநியில் சிஏஏ ரத்து கோரி மாபெரும் கூட்டம்

பழநி, பிப். 28: நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் தீவிர போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட பிரதான எதிர்கட்சிகள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். குடிமக்களின் தேசிய பதிவை ரத்து செய்ய வேண்டும். தேசிய மக்கள்தொகை பதிவை ஏற்கமாட்டோமென வலியுறுத்தி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்நிலையில் கேரளா, ராஜஸ்தான், புதுவை மாநில சட்டமன்றங்களில் இச்சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதுபோல், தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தர்ணா, மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி பழநியில் நேற்றிரவு மின்வாரி திடலில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. வட்டார ஜமாத்துல் உலமா சபை, அனைத்து ஜமாத்தார்கள் இணைந்து நடத்திய இக்கூட்டத்திற்கு பழநி டவுன் முஸ்லீம் தர்ம பரிபாலன சங்க செயலாளர் நாசர்தீன் தலைமை வகிக்க, புதுஆயக்குடி ஜாமீஆ மஸ்ஜித் முத்தவல்லி ஷேக் தாவூத் வரவேற்றார். பழநி திமுக எம்எல்ஏ ஐபி.செந்தில்குமார், எஸ்டிபிஐ மாநில தலைவர் முகமது முபாரக், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் வன்னியரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் பள்ளிவாசல் முத்தவல்லிகள், இமாம்கள், இஸ்லாமிய இயக்கத்தினர் பலர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள், மத்திய- மாநில அரசுகளின் துரோகங்கள், அடக்குமுறைக்கான காரணங்கள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன. இதில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: