இன்று வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவு உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்: திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

திண்டுக்கல், ஏப். 18: திண்டுக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கு 72 மணிநேரத்திற்கான நிலையான இயக்கமுறை குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மத்திய தேர்தல் பொது பார்வையாளர் பிரபுலிங் காவலிகட்டி, தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர் ஜரோன்தே விஷால் தஷ்ரத், காவல் துறை பார்வையாளர் மனோஜ்குமார் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்து தெரிவித்ததாவது: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை ஏப்.19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாட்டு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வாக்குப்பதிவுக்கு நாளுக்கு முந்தைய நாளான இன்று பகல் 12 மணிக்கு முன்னதாக தனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி பணிக்கு சென்று சரியான வாக்குச்சாவடிக்கு வந்துள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அங்குள்ள அடிப்படை வசதிகள், வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மண்டல அலுவலர் வந்தவுடன் தேர்தல் பொருட்கள் அனைத்தையும் கொடுக்கப்பட்டுள்ள பட்டியல்படி சரிபார்த்து பெற்று கொண்டு ஒப்புதல் வழங்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம் (VVPAT) ஆகியவை தங்கள் வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்பட்டவை தானா என்பதை உறுதி செய்திட வேண்டும். வாக்காளர்கள் வாக்களித்தமைக்கு அடையாளமாக வைக்கப்படும் அழியாத மை குப்பிகைளை அதற்கென வழங்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கின்னத்தில் மணல் நிரப்பி அதில் அசையாமல் இருக்கும் வண்ணம் வைத்திட வேண்டும். வாக்குச்சாவடிக்குள் எவ்வித அரசியல் தலைவரின் படம் இருந்தால் அதை உறையிட்டு முழுமையாக மூடி வைக்க வேண்டும்.

வாக்குச்சாவடிக்கு வெளியே 100 மீட்டர் சுற்றளவுக்குள் எவ்வித அரசியல் விளம்பரங்களோ, 200 மீட்டர் சுற்றளவுக்குள் அரசியல் கட்சிகளின் பந்தல்களோ அமைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்திட வேண்டும். இதர வாக்குப்பதிவு அலுவலர்கள், காவலர்கள் அனைவரும் வருகை தந்ததை உறுதி செய்ய வேண்டும். எவரேனும் வராவிட்டடில் அதுகுறித்து மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவித்து மாற்று பணியாளரை வரவழைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு செய்யும் அடைப்பு பகுதியில் போதிய வெளிச்சம் இருப்பதையும், வாக்களிக்கும் ரகசியத்தை காக்கும் பொருட்டு ஜன்னல் மற்றும் கதவு பகுதியிலிருந்து விலக்கி அமைந்திருப்பதையும், வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரத்தின் (VVPAT) மீது நேரடியாக விளக்கு ஒளிபடுமாறு அமைத்திருத்தல் கூடாது என்பதை கவனிக்க வேண்டும். குறுக்கு அம்புக்குறி ரப்பர் ஸ்டாம்ப், உலோக முத்திரைகள், மாதிரி வாக்குப்பதிவு இரப்பர் ஸ்டாம்ப் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். வாக்குச்சாவடியில் பயன்படுத்திட வாக்காளர் பட்டியலின் 3 நகல்கள் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீட்டு படி 1, இதர படிகள் 2, இதில் அனைத்து பக்கங்களும் விடுதலின்றி இடம் பெற்றுள்ளதா என்பதையும், துணை பட்டியல்கள் இணைக்கப்பட்டுள்ளதா எனவும், அனைத்து பக்கங்களும் தெளிவாக அச்சடிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் சரிபார்க்க வேண்டும். வழங்கப்பட்டுள்ள பச்சை தாள் முத்திரை மற்றும் ஒட்டுத்தாள் முத்திரை ஆகியவற்றில் உள்ள எண்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்திட வேண்டும்.

வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரத்தின் (VVPAT) கேபிள் கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். அதன் கேபிள் செல்லும் வழிப்பாதையில் குறுக்கே எவரும் நடந்து செல்லாதபடி பெஞ்ச் அமைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 20 எண்ணம் ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும். அவை அவற்றின் எண்களோடு ஒப்பிட்டு சரியா உள்ளனவா, அவற்றின் பின்புறம் ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டு என அச்சடிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு வெளியே, வாக்குச்சாவடியின் பரப்பு மற்றும் அங்கு வாக்களிக்கும் வாக்காளர்களின் வசிப்பிடம் குறித்த பிரிவுகள் அடங்கிய அறிவிப்பை அனைவருக்கும் நன்கு தெரியும் வகையில் ஒட்ட வேண்டும்.

இதேபோல் படிவம் 17ஏ-ல் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை ஒட்ட வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்களை வெளியில் எங்கும் எடுத்து செல்ல கூடாது. இயந்திரங்களை வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளன்று பரிசோதித்து பார்க்க கூடாது. வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய நாள் பணிகளை முடித்து விட்டு வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடியிலேயே தங்க வேண்டும். பொது தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், டிஆர்ஓ சேக் முகையதீன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post இன்று வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவு உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்: திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: