ஏப்.12 ல் ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு

நாகர்கோவில்,  பிப்.27:  கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் வழிபாட்டுடன் நேற்று தொடங்கியது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்ரல் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முன் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பு இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். இந்த தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்கும். இந்த ஆண்டுக்கான  தவக்காலம் நேற்று (26ம் தேதி) தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பிஷப் நசரேன் சூசை கலந்து கொண்டார். பிரார்த்தனைக்கு பின், அவர் கடந்த ஆண்டு நடந்த தவக்கால குருத்தோலை பவனியின்போது வழங்கப்பட்ட குருத்து ஓலைகளை சேகரித்து எரித்து தயாரிக்கப்பட்ட சாம்பலால், அனைவரின் நெற்றியிலும் சிலுவை வரைந்து, ஆசி வழங்கினார்.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. புனித வாரத்துக்கு முந்தைய 40 நாட்கள் தான் தவக்காலம் ஆகும். சிலுவையில் இயேசு மரிப்பதற்கு முதல்நாள் பெரிய வியாழனாக அனுசரிக்கப்படும். அந்த நாளில் இயேசு தனது சீடர்களின் பாதங்களை கழுவி, அவர்களுடன் உணவருந்தியதை நினைவுபடுத்தும் விதமாக பாதம் கழுவும் சடங்கு நடைபெறும். இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படும். தவக்காலத்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகளில் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் சிலுவைப்பாதை வழிபாடும் நடைபெறும். ஆலயங்களில் தவக்காலத்தில் வசூலிக்கப்படும் சிறப்பு காணிக்கை ஏழைகளின் பசி, பிணி போக்குவதற்காக பயன்படுத்தப்படும். கிறிஸ்தவர்களின் வீடுகளில் தவக்காலத்தில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது. ஆனால் ஏழை, எளியவர்களுக்கு இந்த தவக்காலத்தில் தானம், தர்மம் வழங்குவார்கள்.

Related Stories: