தீ விபத்தை தடுக்க பழநி வனப்பகுதியில் வெளியாட்கள் நுழைய தடை வனத்துறை நடவடிக்கை

பழநி, பிப். 27: தீ விபத்தை தடுக்கும் பொருட்டு பழநி வனப்பகுதியில் வெளியாட்கள் நுழைய தடை விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பழநி வனப்பகுதி சுமார் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு கொண்டது. இங்கு யானை, சிறுத்தை, வரிப்புலி, காட்டெருமை, காட்டுப்பன்றி, மான், கேளையாடு போன்ற அரிய வகை விலங்கினங்களும், சந்தனம், தேக்கு, ஈட்டி உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும், அரிய வகை மூலிகை செடிகளும் உள்ளன. ஆண்டுதோறும் கடும் வெயிலின் காரணமாக வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படுவது வழக்கம். தற்போது வெயில் கொளுத்த துவங்கி உள்ளது. இதன் காரணமாக வனப்பகுதிகளில் செய்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது,

மேய்ச்சல் மற்றும் விறகு சேகரிக்க செல்வோர் போன்றவைக்காக சென்று வந்த வெளியாட்கள் வனப்பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க 10 தீத்தடுப்பு காவலர்கள் நியமிக்கபட்டுள்ளனர். மேலும் காட்டுத்தீ விபத்து குறித்தும், அதனை அணைக்கும் முறை மற்றும் தடுக்கும் முறை குறித்து விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், கொடைக்கானல் மலைப்பகுதி வழியாக செல்லும் சுற்றுலாபயணிகள் புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவதை தடுக்கும் வகையில் வழித்தடத்தில் சோதனைச்சாவடி, எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட உள்ளது. மலைச்சாலையில் புகை பிடிப்பவர் மீது அபராதம் விதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

Related Stories: