சேலம் அரசு மருத்துவமனையில் 3 கோடி மதிப்பில் நவீன தீக்காய சிகிச்சை பிரிவு

சேலம், பிப்.26: சேலம் அரசு மருத்துவமனையில் 3 கோடி மதிப்பீட்டில் நவீன தீக்காயம் சிகிச்சை பிரிவு கட்டிடம் ஒரு மாத்திற்குள் திறக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் முதன் முறையாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக, சேலம் அரசு மருத்துவமனை தரம் உயர்ந்தது. இங்கு பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு, குழந்தைகள் நலம், எலும்பு முறிவு, கண் சிகிச்சை உள்ளிட்ட துறைகளின் கீழ் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தீக்காயத்திற்கு என ₹3 கோடி மதிப்பீட்டில் நவீன சிகிச்சை வார்டு அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் ஓராண்டிற்கு மேலாக நடந்து வந்தது. தற்போது, இந்த பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நவீன தீக்காய சிகிச்சை பிரிவு கட்டிடம் விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது. இதுகுறித்து மருத்துவ அதி்காரிகள் கூறியதாவது:

சேலம் அரசு மருத்துவமனையில் ஓவ்வொரு சிகிச்சை பிரிவுக்கும் நவீன சிகிச்சை பிரிவு கட்டிடம் அமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தீக்காய சிகிச்சை பிரிவுக்கு என தனியாக கட்டிடம் அமைக்கப்படவில்லை. இதனால் ஒரு சில நேரங்களில் நோயாளிகள் முழுமையாக குணமடைவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், தனியார் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டு வந்தனர். இந்நிலையில் தான் தீக்காயத்திற்கு என தனியாக நவீன சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டுவதற்கு அரசு அனுமதியளித்தது. தொடர்ந்து, கட்டிடம் கட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து ₹3 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது, ஒரு சில வேலைகள் மட்டுமே நிலுவயைில் உள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன் ஒரு மாதத்திற்குள், இந்த பிரிவு செயல்பாட்டுக்கு வரும். நவீன சிகிச்சை பிரிவில் பிரத்யேக சிகிச்சை அளிக்கும் கருவிகள் அமைக்கப்படுகிறது. மேலும், சேலம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வசதியுடன் தோல் வங்கி அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: